இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் காட்சி இதுவா?

Update: 2024-10-03 08:55 GMT

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஊர் முழுக்க சிவப்பாக, பற்றி எரிவது போன்று, ஏவுகணைத் தாக்குதல் நடப்பது போன்ற தோற்றம் அளிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஒரு பெண் கதறி அழும் ஒலி கேட்கிறது. நிலைத் தகவலில், "இஸ்ரேலின் அயன்டோம் மீதும் ஈரானின் Missile ஏவுகணை தாக்குதல்

#ஈரானிலிருந்து புறப்பட்டு இஸ்ரேல் உள்ளே நுழையும் பொழுது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ உங்களுக்காக இதற்குப் பிறகு இஸ்ரேல் திருந்த வில்லை என்றால் எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால் இதைவிட இரு மடங்கு அதிகமான யோகங்கள் ஏவப்படும் என ஈரான் அறிவித்துள்ளது... Islamic Republic of Iran" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் காட்சி என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவில் உள்ள காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவிட்டுத் தேடிப் பார்த்தோம். அப்போது சாலை சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் காட்சியானது துபாயில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அந்த வீடியோவை oadventures_ என்ற இன்ஸ்டாகிராம் ஐடி கொண்டவர் 2024 ஏப்ரல் 16ம் தேதி பதிவிட்டிருந்தார். துபாயில் வீசிய சூறாவளிக் காற்று மற்றும் மழை தொடர்பாக அவர் அந்த பதிவை வெளியிட்டிருந்தார்.


உண்மைப் பதிவைக் காண: instagram.com

இந்த வீடியோ காட்சியைத் தொடர்ந்து சாலையில் வாகனங்கள் செல்ல வானத்தில் சிவப்பு நிற ஒளிர் பொருள் மெதுவாக வருவது போன்ற காட்சி இருந்தது. அந்த பகுதியை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சமீப நாட்களாக இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அந்த வீடியோவை 2024 ஆகஸ்டு மாதத்தில் சிலர் தங்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. அதில், அல்ஜீரியன் கால்பந்தாட்ட கிளப்பின் (Mouloudia Club d'Alger) 103வது ஆண்டுவிழா கொண்டாட்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


உண்மைப் பதிவைக் காண: Facebook

அல்ஜீரியல் கால்பந்தாட்ட கிளப் ஒன்றின் கொண்டாட்டம் வீடியோவை லெபனான் மீதான தாக்குதல் என்று முன்பு பகிரப்பட்ட பதிவு தொடர்பாக நாம் ஆய்வு செய்திருந்தோம். அதே வீடியோவை முன், பின்புறம் கட் செய்து, கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாற்றிப் பதிவிட்டிருந்தது தெரிந்தது. இதன் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய காட்சி என்று பரவும் வீடியோ தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

துபாயில் மழை மற்றும் அல்ஜீரியாவில் நடந்த வானவேடிக்கை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒன்று சேர்த்து இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram
Claim :  இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE
Tags:    

Similar News