
சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அரேபியர்கள் போல ஆடை அணிந்தவர்கள், புர்கா அணிந்த பெண்கள் இரவு வானில் பட்டாசு வான வேடிக்கை நடப்பதைப் பார்க்கும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சவூதி அரேபியாவில் தீபாவளிக் கொண்டாட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்லாமியக் கட்டுப்பாடுகள் நிறைந்த நாடான சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டது என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதைத் தவிர தீபாவளி கொண்டாடியதாக எந்த அடையாளத்தையும் வீடியோவில் காண முடியவில்லை. பட்டாசு – வான வேடிக்கையை மட்டும் வைத்து இது தீபாவளி கொண்டாட்டம் என்று கூறிவிட முடியாது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2024 செப்டம்பரிலிருந்து இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இது எங்கு எடுக்கப்பட்டது என்று எந்த குறிப்பும் இன்றி பலரும் இதைப் பதிவிட்டிருந்தனர். சிலர் இது சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடிய போது சிலர் சௌதி அரேபியாவின் தேசிய தினத்தையொட்டி நடந்த வானவேடிக்கை என்று குறிப்பிட்டிருந்தனர். சௌதி அரேபியாவின் தேசிய தினம் எப்போது கொண்டாடப்படுகிறது, அன்றைய தினத்தன்று இப்படி வானவேடிக்கை நடப்பது உண்மையா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம்.
உண்மைப் பதிவைக் காண: instagram.com
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதி அந்நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்படுவது தெரிந்தது. மேலும் அன்றைய தினத்தில் இரவில் இப்படி வானவேடிக்கை நடந்தது தொடர்பான பல வீடியோக்கள் யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தன. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான தகவல் கொண்டது என்பதை உறுதி செய்தன.
2024ம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோ 2024 செப்டம்பரிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. அதுவும் சௌதி அரேபியாவின் தேசிய நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக சில பதிவுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சௌதி அரேபியாவின் தேசிய தின கொண்டாட்டத்தின் வீடியோ எடுத்து சௌதியில் தீபாவளி கொண்டாட்டம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
