ரத்த புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்த மருந்து சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Cancer 2.png
Facebook LinkArchived Link

இதுவரை கொடிய நோயாக இருந்த ரத்த புற்றுநோயை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில், புற்றுநோய் மருத்துவமனையின் முகவரி, போன் நம்பர் கொடுத்துள்ளனர். பல பேர் பார்க்க வேண்டிய, உபயோகமான செய்தி பகிர்ந்துகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, நூருல் ஹலீம் என்பவர் 2019 ஜூலை 27ம் தேதி வெளியிட்டுள்ளார். யாராவது ஒருவருக்கு உதவி கிடைக்கும் நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் பலரும் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

புற்றுநோய் மிகக் கொடிய நோயாக பார்க்கப்படுகிறது. உண்மையில் ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோயை எளிதில் குணப்படுத்திவிட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அது ரத்த புற்றுநோயாக இருந்தாலும் கூட குணப்படுத்த முடியும். தற்போது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை என பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் இதுவரை மருந்தே இல்லாத புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இலவசமாக பகிரப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு பேசினோம். முதலில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றுள்ள எண் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைதானா என்று உறுதி செய்ய தொடர்புகொண்டோம். போனை எடுத்தவர்கள், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை என்று தொடங்கினார்கள். நாம் இந்த தகவலை சொல்ல ஆரம்பித்ததுமே அவர்கள் போனை அப்படியே கட் செய்துவிட்டனர்.

பின்னர், நமக்கு தெரிந்த மருத்துவர் ஒருவரின் உதவியோடு, புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், "தினமும் ஏராளமான போன் கால் இப்படி வருகிறது. அந்த எரிச்சல் காரணமாக அவர்கள் கட் செய்திருக்கலாம், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தொடர்ந்தார். smokeshop

மேற்கண்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள Imitinef Mercilet என்ற மருத்து ரத்த புற்றுநோய்க்கு பயன்படக் கூடியதுதான். ஆனால், இந்த மருந்தால் எல்லாவகை ரத்த புற்றுநோயையும் குணப்படுத்த முடியாது. மேலும், ரத்த புற்றுநோயை குணமாக்கும் ஒரே மருந்து என்று உலகில் எதுவும் இல்லை. சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக இந்த வதந்தி பரவி வருகிறது. இதை நம்பி தினமும் ஏராளமான போன்கால் மட்டுமின்றி, நேரிலேயே பலரும் வருகின்றனர். அவர்களிடம் அந்த தகவல் தவறானது. அப்படி சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்றபோது அவர்கள் அடையும் வேதனை நமக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.

இது தொடர்பாக தேடியபோது 2014ம் ஆண்டிலேயே விகடனில் ஒரு கட்டுரை வெளியானது தெரிந்தது. அதில், பிளட் கேன்சருக்கு இலவச மருந்து - வாட்ஸ்அப்பில் ரவுண்ட் அடிக்கும் விபரீத வதந்தி என்று தலைப்பிட்டிருந்தனர். அதிலும் கூட, "இந்த தகவல் தவறானது, வதந்திகளை பரப்புதவற்கு நீங்கள் துணைபோகாதீர்கள்.

ஏற்கெனவே நோயோடும்... அது தரும் மனவலியோடும் போராடிட்டிருக்கறவங்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இது மேலும் ரணத்தைத்தானே கொடுக்கும். யாரோ இதை ஒரு வேலையா எடுத்து பரப்பிட்டிருக்காங்க. இனியாச்சும் அவங்கள்லாம் திருந்தினா சரி" என்று குறிப்பிட்டிருந்தனர்.

vikatan.comArchived Link

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்த குறிப்பிடப்பட்டுள்ள Imitinef Mercilet மருந்து பெயரை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது Imitinef Mercilet எல்லா புற்றுநோயையும் குணமாக்குமா என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப் பார்த்தோம். அதில், அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட், புனேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டும் இந்த மருந்து கிடைப்பதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது இது குறித்து புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் மிகப்பெரிய மருத்துவமனையான எச்.சி.ஜி கேன்சர் கேரிடம் கேட்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.

avensonline.orgArchived Link

இந்த மருந்து ‘chronic myeloid leukemia’(CML) என்ற ஒரு வகை ரத்த புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுகிறது என்றும், இது இந்தியா முழுக்க உள்ள எல்லா புற்றுநோய் சிகிச்சை மையங்களிலும் கிடைக்கிறது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று குறிப்பிட்டிருந்தனர். நம்முடைய மலையாளம் ஃபேக்ட் கிரஸ்ண்டோவில் கூட இந்த தகவல் தவறானது என்று கட்டுரை வெளியிட்டிருந்தனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ரத்த புற்றுநோய்க்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மட்டுமே மருந்து வழங்கப்படுகிறது, அதுவும் இலவசமாக வழங்கப்படுகிறது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ரத்த புற்றுநோய்க்கு அடையாறு கேன்சர் இஸ்டிடியூட்டில் இலவச சிகிச்சை தரப்படுகிறதா?

Fact Check By: Chendur Pandian

Result: False