
அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மசூதியில் வைத்து ஒன்பது வயது சிறுமியை இஸ்லாமிய மதகுரு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இஸ்லாமியர் ஒருவர் தரையில் அமர்ந்துள்ள படத்தைப் பகிர்ந்துள்ளனர். அவரைச் சுற்றி காக்கி நிற கால்சட்டை அணிந்தவர்கள் உள்ளனர். பார்க்க போலீசார் அவரை கைது செய்து அமர வைத்தது போல் உள்ளது. நிலைத் தகவலில், “அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மசூதியில் வைத்து 9 வயது சிறுமியை கற்பழித்த மதகுரு மொஹமத் அஹமத். ஆசிஃபாக்கு பொங்கின எத்தன பேரு இதுக்கு பொங்கறான்னு பாக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அலிகாரில் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளனர், எப்போது இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிடவில்லை. இந்த பதிவை WORLD LOVE MARKETPLACE என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Rt Suraj என்பவர் 2019 ஜூலை 25ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அலிகார் பல்கலைக் கழகத்தில் உள்ள மசூதியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் காரணமாக கைது செய்யப்பட்ட நபர் என்று குறிப்பிட்டுள்ளனர். இவர் யார் என்று கண்டறிய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில், இந்த படத்தை பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த நபர் அலிகார் பல்கலைக் கழகத்தில் உள்ள மசூதியில் மத குருவாக பணியாற்றி வந்ததும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் கைது செய்திருப்பதும் தெரிந்தது.

அந்த செய்திகளை படித்துப் பார்த்தோம்…
2019 ஜூலை 18ம் தேதி டைம்ஸ் நவ் நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில், “இந்த சம்பவம் சிறுமியின் வீட்டில் நடந்தது” என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியில், அலிகாரில் பொது மக்கள் குறைதீர்ப்பு நாளில் அலிகார் சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளரிடம் பெண்மணி ஒருவர் புகார் அளித்தார். அதில், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மசூதியில் பணியாற்றி வரும் முகமது அகமத் தன்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அதை அந்த நபர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முகமது அகமத் கைது செய்யப்பட்டார்.
அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். இது குறித்து அந்த நபர் கூறுகையில், “சிறுமிக்கு பாடம் நடத்த சென்றேன்… சிலமுறை பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டேன். தொழுகைக்கு அழைப்பதும் இமாம் இல்லாத நேரத்தில் நமாஸ் படிப்பதும் என்னுடைய வேலை. குழந்தைகளுக்கு குரான் பற்றி சொல்லிக்கொடுத்து வந்தேன். நான் பணியாற்றும் மசூதி பல்கலைக் கழகத்துக்கு உள்ளேயே உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அகமத் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக் கழக செய்தி தொடர்பாளர் ஒமர் சலீம் கூறுகையில், “தகவல் தெரிந்ததும் அவரை பணி நீக்கம் செய்துவிட்டோம். இமாம் தற்போது விடுப்பில் உள்ளார். இதனால் அவரை தற்காலிகமாக பணிக்கு வைத்துள்ளோம். இதனால் இவர் அருகில் உள்ள பகுதிகளுக்கு குரான் வகுப்பு எடுக்க செல்வது வழக்கம். அப்படி செல்லும்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது” என்றார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியிலும் இந்த சம்பவம் சிறுமியின் வீட்டில் வைத்து நடந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன் மூலம் ஒன்பது வயது சிறுமியை அலிகார் பல்கலைக் கழக மசூதியில் தற்காலிக மதகுருவாக பணியாற்றிவந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த தகவல் உண்மை என்று உறுதியாகிறது. அதே நேரத்தில் காஷ்மீரில் சிறுமி ஆசிபாவை பல நாட்களுக்கு கோவிலுக்குள் அடைத்துவைத்து, பலரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது போன்று இந்த சம்பவம் நடைபெறவில்லை. கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.

அலிகார் பாலியல் வன்கொடுமை சம்பவம் சிறுமியின் வீட்டில் வைத்தே நிகழ்ந்துள்ளது. குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளி தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையுடன் பொய்யான தகவலையும் சேர்த்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மை மற்றும் பொய்யான தகவல் சேர்த்து வெளியிடப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“மசூதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு!” – ஃபேஸ்புக் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Mixture
