
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

வெள்ளை மாளிகை போன்று தோற்றம் அளிக்கும் மிகப்பெரிய கட்டிடத்துக்குள் மக்கள் நுழைகின்றனர். ஆடியோ தமிழில் உள்ளது. போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், அதிபர் தப்பியோடினார் என்றும் குறிப்பிடுகின்றனர்.
வீடியோவின் நிலைத் தகவலில், “அமெரிக்க வெள்ளை மாளிகை உள்ளே ஆர்ப்பாட்ட காரர்கள் நுழைந்தனர்.. ட்ரம்ப் தப்பி ஓட்டம்… வரலாற்று_புரட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை என்றும் அன்புடன் மீடியா என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூன் 1ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த கட்டிடத்தைப் பார்க்கும்போது வெள்ளை மாளிகை போல இல்லை.


வழக்கமாக வெள்ளை மாளிகை என்று நாம் பார்க்கும் புகைப்படத்தில் உள்ளது போன்ற தோற்றம் இந்த கட்டிடத்துக்கு இல்லை. மேலும், வெள்ளை மாளிகையில் சர்வ சாதாரணமாக நுழைந்து போராட்டம் நடத்திவிட முடியுமா, பாதுகாப்புப் படையினர் யாருமே இல்லையா என்ற கேள்வியும் எழுந்தது.

முதலில் இந்த கட்டிடம் வெள்ளை மாளிகைதானா என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஒஹயோ கேப்பிட்டல் பில்டிங் என்று பல படங்கள் நமக்கு கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவில் உள்ள கட்டிடம் இந்த ஒஹயோ தலைநகர கட்டிடம்தானா என்று அறிய ஒப்பிட்டுப் பார்த்தோம்.

அப்போது இந்த கட்டிடம் வெள்ளை மாளிகை இல்லை, இது ஒஹயோ ஸ்டேட் அவுஸ் என்று அழைக்கப்படும் ஒஹயோ ஸ்டேட்டிபில்டிங் என்பது உறுதியானது.
இந்த கட்டிடத்தின் கூகுள் ஸ்ட்ரீட் வியூவை தேடிப் பார்த்தோம். அதிலும் கூட ஒஹயோ ஸ்டேட்அவுஸ் கட்டிடம், பின்னால் தெரியும் விளம்பர போர்டு போன்றவை தெளிவாகத் தெரிந்ததைக் காண முடிந்தது.

ஒஹயோ கேப்பிட்டல் கட்டிடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, போராட்டக்காரர்கள் இந்த கட்டிடத்துக்குள் நுழையும் புகைப்படங்களை பல ஊடகங்கள் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.

மேலும், பலரும் இது தொடர்பான வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.
நம்முடைய ஆய்வில், இந்த சம்பவம் வெள்ளை மாளிகையில் நடைபெறவில்லை, ஒஹயோ கேபிட்டல்ஹவுஸ் கட்டிடத்தில் நடந்தது என்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் போராட்டம் நடந்ததா?- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
