இங்கிலாந்தின் ஹிஜாப் அணிந்த முதல் பெண் நீதிபதி- குழப்பம் தந்த ஃபேஸ்புக் புகைப்படம்

சமூக ஊடகம் சமூகம் சர்வ தேசம்

பிரிட்டனின் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் ஒருவர் முதன் முறையாக நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று அமெரிக்க நீதிமன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் நீதிபதி படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பிரிட்டனில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் முதன்முறையாக நீதிபதியாக நியமனம்!

40 வயதுடைய ராபியா அர்ஷாத்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohaideen Sain என்பவர் 2020 மே 29ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இங்கிலாந்தில் ஹிஜாப் எனப்படும் இஸ்லாமிய பெண்கள் தங்கள் உடலை முழுக்க மூடும் வகையிலான ஆடையை அணிந்த பெண் ஒருவர் நீதிபதியாக பதவி ஏற்றிருக்கலாம். ஆனால், அவர் எப்படி அமெரிக்க நீதிமன்றத்தில் பணியாற்ற முடியும் என்ற கேள்வி எழுந்தது.

நீதிபதியின் பின்புறம் அமெரிக்க கொடியும், மாநில கொடியும், நீதிமன்ற சின்னமும் இருந்தது. அதை பெரிதுபடுத்தி பார்த்தபோது அதில் STATE OF UTAH JUDICIARY என்று இருந்தது. யூட்டா என்பது உள்ள மாநிலங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் சால்ட் லேக் சிட்டி. யூட்டா தலைநகர் சால்ட்லேக் சிட்டி நீதிமன்ற புகைப்படம் நமக்கு கிடைத்தது. அதுவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பெண் நீதிபதி இருக்கும் புகைப்பட காட்சிகளும் ஒன்றாக இருந்தன. எனவே, இங்கிலாந்து நீதிபதியின் புகைப்படத்தை வைப்பதற்கு பதில் அமெரிக்க நீதிபதியின் படத்தை வைத்திருக்கலாம் என்று தெரிந்தது.

இங்கிலாந்தில் சமீபத்தில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் யாராவது நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்று தேடினோம். அப்போது, இங்கிலாந்தின் மிட்லாண்ட் சர்க்கியூட் மாவட்ட துணை நீதிபதியாக 40 வயதான ரஃபியா அர்ஷத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி கிடைத்தது. மேலும், அவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர்.

thenational.aeArchived Link 1
metro.co.ukArchived Link 2

நம்முடைய ஆய்வுக் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, “இது ரஃபியா ஹர்ஷத்தான். அமெரிக்காவில் பயிற்சிக்கு சென்றபோது எடுத்த படம்” என்று வெளியான ஃபேஸ்புக் பதிவை வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பியிருந்தார். ரஃபியா ஹர்ஷத்தின் சகோதரியிடம் பேசி இந்த புகைப்படம் அமெரிக்காவுக்கு சென்றபோது எடுக்கப்பட்டது என்று உறுதி செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பதிவு எடிட் செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்தபோது எடிட் செய்த விவரம் தெரிந்தது. ஜூன் 12ம் தேதி முதலில் ஹிஜாப் அணிந்த அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய நீதிபதி என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர். கமெண்ட் பகுதியில் ஹிஜாப் அணிந்த பெண் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டதை தொடர்ந்து பதிவு ஜூன் 13ம் தேதி திருத்தப்பட்டு இருந்ததை காண முடிந்தது.

Facebook LinkArchived Link

அதே நேரத்தில் நீதிபதியாக ரஃபியா நியமிக்கப்பட்ட ஒரு வாரத்தில் நம்முடைய ஆய்வு கட்டுரை வெளியாகி இருந்தது. அப்படி என்றால் ஒரு வாரத்தில் அவர் அமெரிக்காவுக்கு சென்று அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்று அல்லது பயிற்சி பெற்றாரா, நீதிபதியாக இல்லாத அவரை அமெரிக்க நீதிபதி இருக்கையில் அமர வைத்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும் அமலில் இருந்த காலக்கட்டத்தில் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு அவர் பயிற்சி பெற சென்றிருப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. 

அவர் வழக்கறிஞராக இருந்தபோது அமெரிக்காவுக்கு பயிற்சி பெற சென்று அப்போது நீதிபதி இருக்கையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பதும் நம்பும்படியாக இல்லை. இருப்பினும் அமெரிக்க நீதிமன்றத்தில் இருக்கும் பெண் யார் என்பதை கண்டறிய முடியவில்லை. இருவரும் ஒரே நபர்தான் என்று ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளதையும் மறுக்க முடியவில்லை. இது தொடர்பாக மேலும் விரிவாக ஆய்வு செய்ய உள்ளோம். போதுமான ஆதாரங்கள் கிடைத்ததும் அதை வழங்குகிறோம்.

முடிவு:

நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இங்கிலாந்தின் ஹிஜாப் அணிந்த முதல் பெண் நீதிபதி- குழப்பம் தந்த ஃபேஸ்புக் புகைப்படம்

Fact Check By: Chendur Pandian 

Result: True