
‘’குடியுரிமை திருத்தத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு வைரல் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், திரளான மக்கள் கூட்டம் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பெருகி வரும் பேராதரவு,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படங்களை பார்த்தால், அவை குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து நடைபெற்றதைப் போல தெரியவில்லை. காரணம், அதில் இடம்பெற்றுள்ள மக்கள் பலரும் கைகளில் வைத்துள்ள கொடியில் வித்தியாசமான உருவம் காணப்படுகிறது. பொதுவாக, பாஜக, ஆர்எஸ்எஸ் கொடிகளில் இத்தகைய உருவம் இருக்காது.

எனவே, மேற்கண்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து நடந்த பேரணி இல்லை என்றும், 2016ம் ஆண்டில் மகாராஷ்டிர மக்கள் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி நடத்திய பிரமாண்ட பேரணியின் புகைப்படம் என தெரியவந்தது.

இதன்படி, கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கோபர்டி கிராமத்தில் மராத்தா இனத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறி 3 தலித் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், மராத்திய மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என வலியுறுத்தியும் லட்சக்கணக்கான மராத்திய மக்கள், மகாராஷ்டிரா முழுவதும் வீதிகளில் திரண்டனர். கையில் சத்ரபதி சிவாஜி கொடியை பிடித்தபடி மிக அமைதியாக மராத்திய மக்கள் நடத்திய பேரணி உலக அளவில் கவனம் ஈர்த்தது.

India Today Link | Amarujala News Link | Maharashtratimes Link |
மராத்தா கிரந்தி மோர்ச்சா என்ற பெயரில் நடைபெற்ற இந்த அமைதி பேரணி தொடர்பான பல்வேறு செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்றும் இணையத்தில் காண முடிகிறது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்படுவதுபோல, இவை குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணி புகைப்படங்கள் கிடையாது.
2) இவை மராத்திய மக்கள் 2016ம் ஆண்டு நடத்திய அமைதிப் பேரணியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் பற்றிய தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது ரசிகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:குடியுரிமை திருத்தத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி: தவறான புகைப்படம்!
Fact Check By: Pankaj IyerResult: False
