மோடியை உலகின் முட்டாள் பிரதமர் என்று கூகுள் அறிவித்ததா?

சமூக ஊடகம் | Social சமூகம்

உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டார் என்று கூகுள் நிறுவனம் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Google 2.png
Facebook LinkArchived Link

சினிமா திரைப்பட காட்சிகளுக்கு மத்தியில் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வைக்கப்பட்டு கொலாஜ் செய்யப்பட்டுள்ளது. அதில், “உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு! கூகுள் நிறுவனம் அறிவிப்பு” என்று இருந்தது.

இந்த பதிவை, Kannadasan Thasan என்பவர் டிசம்பர் 7ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள், பணக்காரர்கள் பட்டியலை ஃபேர்ப்ஸ் இதழ் உள்ளிட்டவைதான் வெளியிட்டு வருகின்றன. கூகுள் அப்படி எந்த ஒரு பட்டியலையும் வெளியிட்டதாக இதுவரை செய்தியில்லை. அதை உறுதி செய்ய கூகுள் உலகின் மோசமான பிரதமர்கள் பட்டியல் ஏதும் வெளியிட்டுள்ளதா என்று கூகுளில் டைப் செய்து தேடினோம்.

அப்போது, கூகுளில் உலகின் டாப் முட்டாள் பிரதமர் என்று டைப் செய்தால் அது பிரதமர் மோடியின் படத்தை காட்டுவதாக பல செய்திகள் வெளியாகி இருந்தன. இதன் மூலம், கூகுள் நிறுவனம் பட்டியலிடவில்லை, கூகுள் தேடல் முடிவுகளில் பிரதமர் மோடியின் படத்தை, அவரைப் பற்றிய செய்தியைக் காட்டியுள்ளார்கள் என்பது தெரிந்தது.

இது குறித்து டி.என்.ஏ வெளியிட்ட செய்தியில், “முன்பு உலகின் மிக மோசமான பயங்கரவாதிகள் என்று டைப் செய்தால் மோடியை காட்டியது. அதற்கு கூகுள் நிறுவனம் கூட மன்னிப்புக் கோரியது. தேடல் பொறியின் தேடுதல் வழிமுறை தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதாகவும் தொழில்நுட்ப காரணமாக இப்படி நிகழ்ந்துவிட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் கூகுள் நிறுவனம் பிரதமர்கள் பற்றி எந்த ஒரு பட்டியலையும் வெளியிடவில்லை என்பது தெரிந்தது.

கூகுள் தேடுபொறி என்பது நாம் என்ன தேடுகிறோமோ அது தொடர்புடைய கட்டுரைகளை காட்டும். உதாரணத்துக்கு பிரதமர் என்பது மோடியையும் குறிக்கும். எப்படி தேட வேண்டும் என்று அதற்கு ஒரு செயல்முறை உள்ளது. இதை அல்கர்தம் என்று சொல்வார்கள். அதன் அடிப்படையில் கூகுள் சர்ச் இன்ஜின் நமக்கு தேடிக்கொடுக்கிறது அவ்வளவுதான். அதற்காக கூகுள் நிறுவனம் அறிவித்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. நமக்கு கிடைத்த ஆதாரங்கள்  தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இப்படி வருகிறது என்பது உறுதியாகிறது.

dnaindia.comArchived Link 1
zeenews.india.comArchived Link 2
time.comArchived Link 3

கூகுள் தேடலில் அப்படி வருகிறது என்பதை அடிப்படையாக வைத்து நியூஸ் 7 தமிழ் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய முடிவு செய்தோம். இது தொடர்பாக தேடியபோது 2015ம் ஆண்டு நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போல அதில் எதுவும் இல்லை. 

“உலகின் முட்டாள் பிரதமர்கள்” (most stupid Prime Ministers in the world) என கூகுள் தேட்டுப்பொறியில் டைப் செய்தால், நரேந்திர மோடியின் புகைப்படம் தோன்றுவதால், கூகுள் தேடுப்பொறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது” என்றே குறிப்பிட்டிருந்தனர்.

Archived Link

நியூஸ் 7 தமிழின் சோஷியல் மீடியா பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டை காட்டி அது உண்மையா என்று கேட்டோம். “இது நாங்கள் வெளியிட்டது இல்லை, போலியானது” என்று கூறினார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “உலகின் முட்டாள் பிரதமர் என்று மோடியை கூகுள் நிறுவனம் அறிவித்தது” என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மோடியை உலகின் முட்டாள் பிரதமர் என்று கூகுள் அறிவித்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False