
‘’நாசாவிற்கு பதில் சிக்னல் அளித்த விக்ரம் லேண்டர்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

FB Link 1 | Archived Link 1 | FB Link 2 | Archived Link 2 |
இது உண்மையில் Tamil Gizbot இணையதளத்தில் வந்த செய்தியின் லிங்க் ஆகும். அதனை, ஒன் இந்தியா மற்றும் தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியின் முழு இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
News Link | Archived Link 3 |
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியின் தலைப்பில் ஒரு கேள்விக்குறி வைத்து, நாசா அனுப்பிய ஹலோ மெசேஜ்க்கு விக்ரம் லேண்டர் ரியாக்சன், என எழுதியுள்ளனர். ஆனால், செய்தியின் லீடில் விக்ரம் லேண்டருக்கு நாசா மெசேஜ் அனுப்பியதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளதாகக் கூறியுள்ளனர்.

பிறகு, செய்தியின் நடுவே, விக்ரம் லேண்டர் பதில் என ஒரு சப்-டைட்டில் போட்டு, அதன் கீழே இது உண்மையில் விக்ரம் லேண்டரிடம் இருந்து வந்ததா அல்லது சந்திரனிடம் இருந்து வந்த பிரதிபலிப்பா என தெரியவில்லை என்று எழுதியுள்ளனர்.

ஆனால், உண்மையில், நிலவில் தரையிறங்கும்போது பூமியுடனான தகவல் தொடர்பை முற்றிலும் இழந்த விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் விழுந்து கிடக்கிறது. செப்டம்பர் 20-21 வரைதான் அந்த பகுதியில் சூரிய ஒளி இருக்கும். அதன்பிறகு முற்றிலும் இருள்தான். அதனால், விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் இயங்குவது சந்தேகம்தான். அதற்குள் பூமியுடன் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினால்தான் உண்டு. இல்லை எனில், விக்ரம் லேண்டர் தனது செயல்பாட்டை தொடங்குவதற்கு வாய்ப்பே இல்லை. இந்நிலையில்தான், நாசா கடந்த செப்டம்பர் 9, 10, 11, 12 தேதிகளில் சக்திவாய்ந்த அதிர்வெண்ணை பயன்படுத்தி ஹலோ என தகவல் அனுப்பியுள்ளது. அதற்கு, நிலவில் இருந்து பிரதிபலிப்பு மட்டுமே கிடைத்துள்ளதாக, ஆங்கில ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளது.

TOI Link | Archived Link |
நாசா அனுப்பிய தகவலுக்கு நிலவுதான் பிரதிபலிப்பு செய்துள்ளதாக, நாசா விஞ்ஞானிகளே கூறியுள்ளனர் என்று, ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடும் நிலையில், அது விக்ரம் லேண்டர்தான் அனுப்பியுள்ளதாக முதலில் கூறிவிட்டு, பிறகு மற்றொரு இடத்தில் அது நாசாவா, லேண்டரா என்ற குழப்பம் உள்ளதாகவும் கிஸ்பாட் செய்தியில் கூறியுள்ளனர்.
இவ்வாறு செய்தியின் தலைப்பு, லீடு, சப் டைட்டில் என பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதன் மூலமாக வாசகர்களை குழப்பியுள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் யாரும் தற்போது மகிழ்ச்சியாக இல்லை. தங்களது முயற்சி தோற்றுவிட்டதே என்ற கவலையில்தான் உள்ளனர். கிஸ்பாட் செய்தியில் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று குறிப்பிடுகின்றனர்.
ஆனால், தமிழ் ஊடகங்கள் வேறு யாரும் இப்படியான செய்தியை வெளியிடவில்லை. சந்திரயான்-2 தொடர்பாக வெளியாகியுள்ள புதிய தகவல், விக்ரம் லேண்டர் பற்றிய புதிய தகவல், லேண்டரை தொடர்புகொள்ள நாசா முயற்சி, என்ற தலைப்புகளில்தான் பலரும் இதே செய்தியை பதிப்பித்துள்ளனர்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, கிஸ்பாட் இணையதளம் பரபரப்பிற்காக, வாசகர்களை குழப்பும் வகையில் மிக முக்கியமான செய்தியில், இத்தகைய முரணான தகவல்களை இணைத்து பதிப்பித்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்தியில் நம்பகத்தன்மை இல்லை, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நாசாவிற்கு பதில் சிக்னல் அளித்த விக்ரம் லேண்டர்: முன்னுக்குப் பின் முரணான செய்தி
Fact Check By: Pankaj IyerResult: Mixture
