
‘’14 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பெற்ற இந்த பெண் பிரசவித்த கையோடு இறந்ததால் டாக்டர் கதறி அழுகிறார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

கடந்த செப்டம்பர் 16, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், புதிதாய் பிறந்த பச்சிளங்குழந்தை தாயின் அருகில் அழுகிற புகைப்படத்தையும், மருத்துவப் பணியாளர் சீருடையில் உள்ள மற்றொருவர் அழுவது போன்ற புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்துள்ளனர்.
அதன் மேலே, ‘’திருமணமாகி, 14 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தையை பார்க்காமல், அதன் தாய் உயிரிழந்துவிட்டார். இதனை தாங்கிக் கொள்ள முடியாத மருத்துவர் கண்ணீரோடு அங்கேயே ஓரமாக அமர்ந்துவிட்டார்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படங்களை ஒருமுறை உற்று கவனித்தபோது, அதன் மேலே, ஒரு வாட்டர் மார்க் இடம்பெற்றுள்ளதை கண்டோம்.
அந்த வாட்டர் மார்க்கை சற்று பெரிதுபடுத்தி பார்த்தோம். அப்போது, Merve Tiritoglu Sengunler – Photography என்று எழுதியிருப்பதாக தெரியவந்தது.
இதன்பேரில், யாரேனும் புகைப்பட கலைஞர் அல்லது புகைப்பட நிபுணர் உள்ளனரா என விவரம் தேடினோம். அப்போது, இது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞரின் லோகோ என விவரம் கிடைத்தது.

அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் முழுக்க முழுக்க புதிதாக பிறந்த குழந்தைகள், தாய்மார்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை வைத்துப் பார்க்கையில், அவர் பிரசவ நிகழ்வுகளை படம்பிடிக்கக் கூடிய நிபுணர் என்று தெரியவருகிறது.

நாம் ஆய்வு செய்யும் புகைப்படம் கடந்த 2015, டிசம்பர் 14 தேதியன்று, இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

எனவே, இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் இறக்கவில்லை என்பது தெளிவாகிறது. பிரசவத்தின்போது எடுத்த புகைப்படம் இது என்றும் சந்தேகமின்றி தெரியவருகிறது.
இதற்கடுத்தப்படியாக, ‘டாக்டர் அழுகிறார்’ எனக் கூறும் புகைப்படம் எப்போது எங்கே எடுத்தது என விவரம் தேடினோம்.
அப்போது, அதுவும் ஒரு பிரசவ நிகழ்வின்போது எடுத்த புகைப்படம்தான் என தெரியவந்தது. அதில் இருக்கும் நபர் டாக்டர் இல்லை என்றும், அவருக்கு புதிதாய் குழந்தை பிறந்த தருணத்தில் எடுத்த புகைப்படம் இது என்றும் உறுதியாகிறது. மேலும், இதுவும் துருக்கியை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவரால், 2017, செப்டம்பர் 5 அன்று இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

துருக்கி மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த பதிவின் வாசகத்தை மொழிபெயர்த்து பார்த்தபோது, ‘குழந்தை பிறந்த தருணத்தில், புதிதாய் தந்தை ஆனதால் நெகிழ்ந்துபோன நபர்,’ என அர்த்தம் கிடைத்தது.
எனவே, இரு வேறு சம்பவங்களில் தொடர்புடைய புகைப்படத்தை எடுத்து, ‘’திருமணமாகி 14 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த குழந்தையை பார்க்க இயலாமல் இறந்து போன தாயைக் கண்டு கதறி அழும் மருத்துவர்,’’ எனக் கூறி தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:Factcheck: இந்த பெண் பிரசவத்திற்குப் பின் இறந்ததால் டாக்டர் கதறி அழுவதாக பரவும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
