
‘’பாஜக இப்படியே தோற்றுக்கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆயிடும்,’’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதாகக் கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 12, 2020 அன்று வெளியிட்டுள்ளார். அவரது புரொஃபைல் பார்த்தபோது, ‘மூத்த பத்திரிகையாளராக பணிபுரிகிறேன்’, என்று குறிப்பிட்டிருந்தார். அதனால், அவர் வெளியிடும் பதிவுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி இந்த பதிவையும் சிலர் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சமீபத்தில் நடைபெற்று முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 3வது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேசமயம், பாஜக சொற்பமான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதுதவிர மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு இடங்களில் கூட வெற்றிபெறாதது டெல்லி மட்டுமின்றி இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்த நிகழ்வாகும்.

India Today News Link | Archived Link |
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, சமூக ஊடகங்களில், பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை விமர்சித்து பலரும் வித விதமான மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் நிறைய தவறான தகவலாக இருந்தாலும் பார்ப்பதற்கு உண்மை போலவே உள்ளதால், சாமானிய சமூக ஊடக பயனாளர்களும் அதனை நம்பி ஏமாற்றமடைகின்றனர்.
அத்தகைய வதந்திகளில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள செய்தியும். உண்மையில், கடந்த 2018ம் ஆண்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவம் பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்ட ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியின்போது, திடீரென உணர்ச்சிவசப்பட்ட ரஜினிகாந்த், ‘’எதற்கெடுத்தாலும் மக்கள் போராட்டம் போராட்டம் என்று இருந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்,’’ எனக் குறிப்பிட்டார். அவரது கருத்து அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி நிறைய ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

இதில் ஒரு டெம்ப்ளேட்டை எடுத்து தற்போதைய டெல்லி தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப அதனை எடிட் செய்து மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் சம்பந்தப்பட்ட நபர் பகிர்ந்துள்ளார்.

மேலும், ரஜினிகாந்த் டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றி எந்த கருத்தும் தற்போது வரை தெரிவிக்கவில்லை என்பதே அவரது நெருங்கிய வட்டாரங்கள் குறிப்பிடும் விசயமாகும். கடைசியாக, தேசிய மக்கள் பதிவேடு பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம் பற்றியும் அவர் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அதுதொடர்பான செய்திகளை இணையத்தில் காண முடிகிறது.
எனவே ரஜினிகாந்த் பற்றிய பழைய செய்தி ஒன்றின் டெம்ப்ளேட்டை எடுத்து, தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப அதனை எடிட் செய்து பகிர்ந்துள்ளனர் என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான செய்தி இடம்பெற்றுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாஜக இப்படியே தோற்றுக் கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று ரஜினி சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
