
‘’காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட, பாஜக ஆட்சியில்தான் அதிக ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்,’’ என்று ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதுதான் இவனுங்க சாதனை!
இந்த பதிவில், இதுதான் இவனுங்க சாதனை எனக் கூறி, கீழே ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’2004-2014 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் 171 ராணுவ வீரர்கள் மரணம்; 2014-2019 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சிக்காலத்தில் 1250 ராணுவ வீரர்கள் மரணம்,’’ என்று கூறியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவில் கூறியுள்ளதுபோல, பாஜக ஆட்சிக் காலத்தில், உயிரிழந்த ராணுவ வீரர்கள் எத்தனை பேர் என, தேடினாம். கூகுளில் தேடியபோது, இதுபற்றி ஏற்கனவே, இந்தியாடுடே நடத்திய உண்மை கண்டறியும் சோதனையின் முடிவுகள் கிடைத்தன.
அந்த சோதனையில், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை எவ்வளவு என்று மட்டுமே ஆய்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நமது ஆய்வு, பாஜக மற்றும்
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை பற்றியதாகும்.
இதையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, இதுபற்றி ஏதேனும் விவரம் உள்ளதா, என தேடிப் பார்த்தோம். அதில், 2017-18 ஆண்டுக்கான தகவல் அறிக்கை கிடைத்தது. அந்த அறிக்கையின் 15வது பக்கத்தில், 2013, 2014, 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் உயிரிழந்த ராணுவ வீரர்கள், பொதுமக்கள், தீவிரவாதிகள் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது. இதன்படி, 2014 முதல் 2017 வரையான பாஜக ஆட்சிக் காலத்தில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 300க்கும் குறைவாகவே உள்ளது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதேபோல, 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என தேடிப் பார்த்தோம். உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில், 2004-05ம் ஆண்டுக்கான தகவல் அறிக்கை தனியாகவும், 2005 முதல் 2014 வரையான காலத்திற்கு தனி தகவல் அறிக்கையும் இருந்தன. இதன்படி, 2004ம் ஆண்டில், 281 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக, தகவல் கூறப்பட்டிருந்தது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதையடுத்து, 2005 முதல் 2014 வரையான காலத்தில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என தேடிப்பார்த்தோம். அதுபற்றிய தகவல் அறிக்கை கிடைத்தது. அதில், மொத்தம் 778 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக, தகவல் கூறப்பட்டிருந்தது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதுபற்றி பிபிசி வெளியிட்டுள்ள விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, பார்த்தால், 2014 முதல், 2017 வரையான பாஜக ஆட்சிக்காலத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 300ஐ கூட தாண்டவில்லை. அதேசமயம், 2004 முதல் 2014 வரையான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதே காலத்தில் தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த புள்ளிவிவரத்தில் மேலும் மாற்றம் வரலாம். இருந்தபோதிலும், இந்த பதிவில் கூறப்படுவது போல, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ராணுவ வீரர்கள் குறைவாகவும், பாஜக ஆட்சிக்காலத்தில் அதிகமான ராணுவ வீரர்களும் தீவிரவாதிகளால் கொல்லப்படவில்லை.
பாஜக ஆட்சிக்காலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில், புல்வாமா தற்கொலை தாக்குதல் மிகப்பெரிய சம்பவமாகும். அதன் அடிப்படையில், பாஜக ஆட்சியை குறைசொல்லும் நோக்கில், இந்த பதிவை தயாரித்து வெளியிட்டுள்ளதாக, தெரியவருகிறது. இதுதவிர, காங்கிரஸ் ஆட்சியை பாராட்டி கூறப்படும் புள்ளிவிவரமும் தவறான ஒன்றாகவே உள்ளது.
எனவே, நாம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பதிவில் கூறப்படும் தகவல்கள் தவறானவை.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே, இத்தகைய தவறான, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Title:பாஜக ஆட்சிக்காலத்தில் 1250 ராணுவ வீரர்கள் மரணம்: உண்மை என்ன?
Fact Check By: Parthiban SResult: False
