
விவசாயிகள் கோபத்தில் அம்பானியின் ஜியோ டவர் பற்றி எரிகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
செல்போன் டவர் பற்றி எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகளின் கோபத்தில் அம்பானியின் ஜியோ டவர் பற்றியெரிகிறது…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை தோழர் அன்பு என்ற ஃபேஸ்புக் பதிவர் 2020 டிசம்பர் 29ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
விவசாயிகள் கோபத்தில் ஜியோ மொபைல் போன் டவர் பற்றி எரிகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தீ வைத்தார்களா, அல்லது விவசாயிகள் கோபம் அதிகரித்துள்ள சூழலில் செல்போன் டவர் எரிந்தது என்று குறிப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை. எனவே, இந்த செல்போன் டவர் எங்கே, எப்போது எரிந்தது. விவசாயிகள் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இந்த சூழலில் செல்போன் டவர் எரிந்ததா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ குஜராத்தி உள்பட பல ஃபேக்ட் செக் ஊடகங்களும் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்திருப்பது தெரிந்தது.
அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் நம்முடைய ஆய்வைத் தொடர்ந்தோம். அப்போது புதிய விவசாய சட்டத்தை எதிர்த்து பஞ்சாபில் ஜியோ டவரை எரித்த விவசாயிகள் என்று இந்த வீடியோவை கன்னட ஊடகம் ஒன்று பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடியபோது, 2017ம் ஆண்டு யூடியூபில் பதிவிடப்பட்ட வீடியோ நமக்குக் கிடைத்தது. அதிலும் இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. அதே நேரத்தில் 2017ம் ஆண்டே இது பதிவிடப்பட்டு இருந்ததால் இதற்கும் விவசாயிகள் போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை என்பது மட்டும் உறுதியானது.
செல்போன் டவர் எரிப்பு என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது விசாகபட்டினம், டேராடூன் என பல இடங்களில் எரிந்துபோன செல்போன் டவர்கள் பற்றிய செய்தி நமக்கு கிடைத்தன. அவற்றை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது டேராடூனில் எரிந்த செல்போன் டவர் வீடியோவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள வீடியோவும் ஒன்றாக இருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: amarujala.com I Archive
amarujala.com என்ற ஊடகம் 2017 ஜூன் 28ம் தேதி டேராடூனில் வீட்டில் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல் போன் டவர் திடீரென்று எரிந்தது என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் விவசாயிகள் தீ வைத்தார்கள் என்ற தகவல் தவறானது என்பதும் உறுதியானது.
டேராடூன், செல்போன் டவர் போன்ற கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடியபோது நியூஸ் 18ல் வெளியான வீடியோவுடன் கூடிய பதிவு நமக்கு கிடைத்தது. 2017 ஜூன் 29ம் தேதி வெளியான வீடியோவுடன் கூடிய செய்தியில், டேராடூனில் இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: news18.com I Archive
வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது 2020 செப்டம்பரில் இருந்துதான். இந்த செல்போன் டவர் எரிந்த சம்பவம் 2017ம் ஆண்டு நடந்தது என்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் செல்போன் டவர் எரிந்ததற்கும் விவசாயிகள் போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
2017ல் டேராடூனில் நிகழ்ந்த மொபைல் டவர் விபத்து வீடியோவை எடுத்து 2020 விவசாயிகள் போராட்டம் காரணமாக நடந்தது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஜியோ செல்போன் டவரை எரித்த விவசாயிகள் என்று கூறி பகிரப்படும் பழைய வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
