குழந்தைகள் தொலைக்காட்சியான கார்ட்டூன் நெட்வொர்க் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்தியது என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கார்ட்டூன் நெட்வொர்க் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "கார்ட்டூன் நெட்வொர்க் நேற்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது..!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குழந்தைகள் தொலைக்காட்சியான கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்பட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அதற்கு RIP என்ற ஆன்மா இளைப்பாறட்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். ஆனால், டிடிஎச் சேவையில் கார்ட்டூன் நெட்வொர்க் வந்துகொண்டு இருந்தது.

இந்த நிலையில் ஊடகங்கள் பலவற்றிலும் கார்ட்டூன் நெட்வொர்க் செயல்பாடு நிறுத்தப்பட்டது என்று பரவும் தகவல் உண்மையில்லை என்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனாலும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவது நிற்கவில்லை. எனவே, இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

அப்போது, Animation Workers Ignited என்ற எக்ஸ் தள பக்கத்தில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைத் தொடர்ந்து அனிமேஷன் தொழில்துறையில் அதிக அளவில் பணி நீக்கம் உள்ளது என்பது போன்று குறிப்பிட்டு கார்ட்டூன் நெட்வொர்க் இறந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பிப் பதிவிட்டிருந்தது தெரிந்தது. இந்த பதிவை அடிப்படையாக வைத்து கார்ட்டூன் நெட்வொர்க் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது போன்று சமூக ஊடகங்களில் பலரும் தவறான தகவலைப் பரப்பியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Archive

இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க் தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதில், "கார்ட்டூன் நெட்வொர்க் அல்லது அதன் ஸ்டூடியா நிரந்தரமாக மூடப்படுகிறது என்று பரவும் தகவலில் துளியும் உண்மையில்லை என்பதை காரட்டூன் நெட்வொர்க் தெளிவுபடுத்த விரும்புகிறது. புதுமையான கார்ட்டூன் நிகழ்ச்சிகளை வழங்கவும் மக்களை மகிழ்விக்கவும் தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே இருப்போம். அனிமேஷன் நிகழ்ச்சிகள் தொடரும், இன்னும் பல புதிய காட்சிகள் வர உள்ளது. அவற்றில் சில அட்வென்சர் டைம். ஃபாஸ்டர்ஸ் ஹோம் ஃபார் இமேஜினரி ஃபிரன்ட்ஸ் உள்ளிட்டவையாகும்" என்று குறிப்பிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உண்மைப் பதிவைக் காண: msn.com I Archive I thestatesman.com I Archive

இது தொடர்பாக கார்ட்டூன் நெட்வொர்க் இணையதள பக்கத்துக்குச் சென்று பார்த்தோம். கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. அதே நேரத்தில் இந்த தகவல் தவறானது என்று ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கும் தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. மூடப்படுவதாக கார்ட்டூன் நெட்வொர்க் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் டிடிஎச் சேவையில் கார்ட்டூன் நெட்வொர்க் தொடர்ந்த ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கார்ட்டூன் நெட்வொர்க் டிவி தன்னுடைய செயல்பாட்டை நிறுத்தியது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்பட்டது என்று பரவும் வதந்தியால் சர்ச்சை!

Fact Check By: Chendur Pandian

Result: False