
இந்து பெண்ணை கட்டாய மதம் மாற்றும் கொடுமை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இளம் பெண் ஒருவரை ஏராளமான பெண்கள் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்துக்களை மதம் மாற்றும் கொடுமை..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்து பெண்ணை மதம் மாற்றுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை. வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் தாக்குதல் என்று சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வரும் சூழலில் இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்று மறைமுகமாகக் குறிப்பிடுவது போல் உள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது வங்கதேசத்தில் நடந்தது என்று இந்த வீடியோவை பலரும் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. வங்கதேசத்தில் உள்ள பிரமன்பரியா (Brahmanbaria) என்ற இடத்தில் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா லீக் நிர்வாகியை தாக்கிய மாணவர்கள் என்று இந்த வீடியோவை பலரும் பதிவிட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் சத்ரா லீக், அவாமி லீக், பெண் நிர்வாகி, பிரமன்பரியா என்று சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். போது, பல யூடியூப் வீடியோ பதிவுகள் தான் நமக்கு கிடைத்தன. இவற்றுக்கு இடையே ஒரு எக்ஸ் தள பதிவு ஒன்று நமக்கு கிடைத்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் அந்த பெண்ணை தாக்கும் பெண்களுள் அவரும் இருந்தார். பார்க்க நெற்றியில் பொட்டு வைத்து இந்து பெண் போல இருந்தார்.
அந்த பதிவில் தாக்கப்பட்ட மாணவியின் கல்லூரி அடையாள அட்டையையும் அவர் காட்டியிருந்தார். அந்த பதிவில், “இந்த வீடியோவில் இடம் பெற்ற பெண் இந்து அல்ல, அவர் ஒரு முஸ்லிம். அவரது பெயர் அஃப்சானா எபாத். இந்த சம்பவம் பிரமன்பரியாவில் தன்கர் பார் என்ற இடத்தில் நடந்தது. அவர் சத்ரா லீக் தொண்டர் என்பதால் அவர் தாக்கப்பட்டார். மாணவர் போராட்டத்தின் போது மாணவர்களை தாக்கியவர் இவர் என்று சில ஃபேஸ்புக் பதிவுகளில் கூறப்பட்டிருந்தது.
கூர்ந்து கவனித்தால் அந்த பெண் புர்கா அணிந்திருப்பதைக் காணலாம். மக்களைத் தவறாக வழிநடத்த வகுப்புவாத புனைவு கதைகளை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதற்கு இந்த பிரசாரம் ஒரு உதாரணம்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இந்த பெண் இந்து அல்ல, இஸ்லாமியர் என்பது உறுதியாகிறது.
https://twitter.com/vijaygajera/status/1822578748170109124
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோவை, வதந்தி பரப்பும் நோக்கில் இந்து பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறார் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா லீக் நிர்வாகியை மாணவர்கள் தாக்கிய வீடியோவை இந்து பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இந்து பெண்ணை கட்டாய மதம் மாற்றம் செய்கின்றனர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
