லுலு மால் நிர்வாகத்திடமிருந்து தமிழ்நாடு பாஜக தலைவர் 65 லட்சம் பெற்றார் என ஜூனியர் விகடனில் செய்தி வெளியானது போன்று வதந்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜூனியர் விகடன் இதழில் வெளியான செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்தது போன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், "லுலு... அண்ணாமலை... பாஜக... கோவை லுலு... அண்ணாமலை லாலி!" என்று தலைப்பிடப்பட்டிருந்தது. செய்தியின் உள்ளே 65 ஸ்வீட் பாக்ஸ்கள்(65 லட்சம்) பெற்றார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "கோயமுத்தூர் லூலூ மாலிடம் 65 லட்சம் லஞ்சம் வாங்கிய அண்ணாமலை - செய்தி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை எங்கே செல்லும் இந்த பாதை என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 18ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் லுலு மால் அமைய விட மாட்டோம் என்று கூறியிருந்தார். ஆனால், கோவையில் பிரம்மாண்ட லுலு மால் திறக்கப்பட்டது. இந்த நிலையில் லுலு மால் நிர்வாகத்திடமிருந்து அண்ணாமலை ரூ.65 கோடி பெற்றார் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜூனியர் விகடனில் இது தொடர்பாக கட்டுரை வந்தது போன்று பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த பக்கத்தைப் பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டது போல இருந்தது. ஜூனியர் விகடன் வெளியிடும் கட்டுரையில் உள்ளது போன்று தமிழ் எழுத்துரு (Font) இதில் இல்லை. எனவே, இது போலியானது என்பது தெளிவாக நமக்குத் தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம்.

முதலில் ஜூனியர் விகடனில் இப்படி ஏதும் கட்டுரை வெளியாகி உள்ளதா என்று அறிய அதன் இணையதளத்துக்குச் சென்று பார்த்தோம். 21-6-2023 தேதியிட்ட இதழில் இப்படி எந்த ஒரு கட்டுரையும் வெளியாகவில்லை. எனவே, ஜூனியர் விகடன் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு இந்த செய்தியின் புகைப்படத்தை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவர்களும் இது போலியானது என்று தெரிவித்தனர். மேலும், 3ம் பக்கத்தில் வெளியான கட்டுரையை நமக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.

அதில், "மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி ஆகியோர் படத்துடன் கட்டுரை வெளியாகி இருந்தது. டெல்லி... ஆளுநர்... அமலாக்கத்துறை... மும்முனைத் தாக்குதலில் தி.மு.க! என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை அப்படியே மாற்றி, லுலு மால் நிர்வாகத்திடமிருந்து அண்ணாமலை லஞ்சம் பெற்றார் என்று தவறான கதையை எழுதி வெளியிட்டிருப்பது தெளிவானது.

நம்முடைய ஆய்வில், இந்த கட்டுரையை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரையைத் திருத்தி தவறான கட்டுரையை எழுதி, சமூக ஊடகங்களில் பரப்பியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழகம் லுலு மால் கட்ட ரூ.65 லட்சத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முறைகேடாக பெற்றார் என்று பரவும் செய்தியை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:லுலு மால் நிர்வாகத்திடம் ரூ.65 லட்சம் வாங்கிய அண்ணாமலை என்று பரவும் போலி செய்தி!

Written By: Chendur Pandian

Result: False