
மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில், அம்மாநில பாரதிய ஜனதா கட்சியும் மோடிக்கு எதிராக திரும்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மணிப்பூரில் பாஜக கொடி மற்றும் அம்மாநில முதல்வர் உருவப்படத்தைப் பாரதிய ஜனதா கட்சியினரே எரித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “மணிப்பூரில் உள்ள பாஜகவினர் மோடிக்கு எதிராக மோடியின் உருவ பொம்மை மற்றும் பாஜக கொடிகளை எரிக்கும் காணொளி காட்சி!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை Salahudeen Kareem என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 18ம் தேதி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் அதிர்வலை எழுந்துள்ளது. இந்த சூழலில் தற்போது அம்மாநில பாஜக-வினர் மோடிக்கு எதிராக திரும்பியதாக மேற்கண்ட வீடியோ பகிரப்படுவதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2022ம் ஆண்டில் இருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.
2022 ஜனவரி 30ம் தேதி இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் சேவாதளம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில், மணிப்பூர் பாஜக தன்னுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனுடன் இணையதள ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் இணைப்பையும் பதிவிட்டிருந்தனர்.
மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதில் அக்கட்சிக்குள் குழப்பம் என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக-வில் இணைந்த 16 தலைவர்களில் 10 பேருக்கு சீட் வழங்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் வெளியானதும் பாஜக தொண்டர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். கட்சியின் கொடி மற்றும் பேனர் உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் 2022ம் ஆண்டு வீடியோவை 2023ல் மணிப்பூர் கலவரம் நிலவும் சூழலில் தற்போது நடந்தது போன்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மணிப்பூர் பாஜக-வினர் அக்கட்சிக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்று பரவும் வீடியோ 2022ல் அம்மாநில சட்டமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மணிப்பூர் பாஜக மோடிக்கு எதிராக திரும்பியது என்று பரவும் வீடியோ- பின்னணி என்ன?
Written By: Chendur PandianResult: False
