நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 197 இடங்களுக்குக் கீழ் செல்லும் என இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive 1 I Facebook I Archive 2

இந்தியா டுடே வெளியிட்ட தேர்தல் கருத்துக் கணிப்பு நியூஸ் கார்டு ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், பாஜக - என்டிஏ கூட்டணி 197 இடங்களிலும், இந்தியா கூட்டணி 304 இடங்களிலும் வெற்றி பெறும் என்று உள்ளது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் கருத்துக் கணிப்புகளை வெளியிட முடியாது. அப்படி இருக்கும் போது இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டது என்ற தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டில் என்டிஏ கூட்டணிக்கு கடந்த தேர்தலைக் காட்டிலும் 18 இடங்கள் குறைவாக கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் கடந்த தேர்தலில் 350க்கும் அதிகமான இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. எனவே, இது எடிட் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிந்தது. எனவே, இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

நம்முடைய தேடலில், இந்தியா டுடே எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு நமக்கு கிடைத்தது. அதில், என்டிஏ கூட்டணி 335 இடங்களிலும், இந்தியா கூட்டணி 166 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறாக பகிர்ந்திருப்பது தெளிவானது. இந்தக் கருத்துக் கணிப்பை இந்தியா டுடே 2024 பிப்ரவரி 8ம் தேதி வெளியிட்டிருந்தது.

புதிதாக ஏதேனும் கருத்துக் கணிப்பை இந்தியா டுடே வெளியிட்டுள்ளதா என்று தேடிப் பார்த்தோம். 304 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று புதிய கருத்துக் கணிப்பு எதையும் அந்த ஊடகம் வெளியிட்டதாகச் செய்தி இல்லை. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாஜக கூட்டணி 197 இடங்கள் பெறும் என்று இந்தியா டுடே புதிய கருத்துக் கணிப்பு என்று பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜக கூட்டணி 197 இடங்களுக்குள் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: Altered