
லெபனான் நாட்டுக்கு குவியல் குவியலாக ஆயுதங்களை அனுப்பிய ரஷ்யா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
விமானத்தில் பொருட்கள் ஏற்றப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் என்ன ஏற்றப்படுகிறது என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், “ரஷ்யாவில் இருந்து குவியல் குவியலாக ஆயுதங்கள் லெபனான் நாட்டுக்கு வருகை..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
உண்மை அறிவோம்:
இஸ்ரேல் நாட்டு ராணுவம் லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பு பதிலடி அளித்து வருகிறது. லெபனான் ராணுவம் தாக்குதலில் இறங்கியதாக இதுவரை தகவல் இல்லை. மேலும், லெபனான் ராணுவம் பொருளாதார சூழல், போதுமான நிதி இல்லாமை காரணமாக ஒதுங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் ரஷ்யா ஆயுதங்களை வழங்கினால் அதை யாருக்கு வழங்கும் என்ற கேள்வி எழுகிறது. பயங்கரவாத அமைப்புக்கு நேரடியாக ஆயுதங்கள் அளித்தால் அது சர்வதேச அளவில் பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, லெபனான் நாட்டுக்கு ரஷ்யா அளித்த மனிதாபிமான உதவி என்று தெரியவந்தது. அதாவது, உணவுப் பொருட்கள், அவசரகால தேவைப் பொருட்கள், மருந்துகள், நடமாடும் மின் உற்பத்தி வசதிகள் போன்றவற்றை அளித்திருப்பதாக செய்திகள் நமக்குக் கிடைத்தன.
உண்மைப் பதிவைக் காண: dha.com.tr I Archive I actualidad.rt.com I Archive
மேலும், வீடியோவில் உள்ள லோகோ ரஷ்ய நாட்டின் அவசரகால சூழல்நிலை அமைச்சகத்தினுடையது (Ministry of Emergency Situations of the Russian Federation) என்று தெரியவந்தது. எனவே, அந்த அமைச்சகம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதா என்று தேடினோம். அப்போது, ரஷ்ய வெளியுறவுத் துறையின் எக்ஸ் தள பக்கத்தில் இந்த வீடியோ அக்டோபர் 3, 2024 அன்று வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில், லெபனான் நாடடுக்கு ரஷ்ய அவசரகால சூழ்நிலை அமைச்சகத்தின் சார்பில், 33 டன் உணவு, மருந்து, நடமாடும் மின்சார உற்பத்திக்கான கருவி உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் லெபனான் நாட்டுக்கு வழங்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நம்முடைய ஆய்வில் லெபனான் நாட்டுக்கு ரஷ்யா உணவு, மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கிய வீடியோவை ஆயுதங்களை வழங்கிய ரஷ்யா என்று தவறாகப் பகிர்ந்திருப்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
லெபனானுக்கு ரஷ்யா அனுப்பிய மனிதாபிமான உதவிப் பொருட்களை ஆயுதங்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
