தி.மு.க அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வாங்கி மது அருந்தும் பெண்கள் என்று ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்பட பதிவை அனுப்பியிருந்தார். வரிசையாக உட்கார்ந்து பெண்கள் மது அருந்தும் புகைப்படத்துடன் "மகளிர் உரிமை தொகை திரும்ப சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்து விட்டது. வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு சரியாக சொல்லி இருக்காங்க..." என்ற தகவலையும் அதில் அவர் அனுப்பி, இந்த தகவல் உண்மையா என்று கேட்டிருந்தார்.

இதை சமூக ஊடகங்களில் யாரும் பதிவிட்டுள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம். வாசகர் அனுப்பிய புகைப்படத்துடன், மூதாட்டி ஒருவர் மது அருந்தும் வீடியோவை வைத்து KODAVASAL என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sivanesh S. Shiva என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 அக்டோபர் 9ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்த பணத்தை வாங்கும் பெண்கள் மது அருந்துவதாக அவ்வப்போது பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வந்திருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I lovehappinessandpeace.wordpress.com I Archive 2

அக்டோபர் 30, 2016 தேதியிட்ட பிளாக் ஒன்றில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதன் பிறகு 2017ல் இந்த புகைப்படத்துடன் கூடிய ஃபேஸ்புக் பதிவும் நமக்கு கிடைத்தது. இந்த புகைப்படம் உண்மையில் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று கண்டறிய முடியவில்லை. ஆனால், நமக்கு கிடைத்த முடிவுகள் எல்லாம் இந்த புகைப்படத்துக்கும் மகளிர் உரிமைத் தொகைக்கும் தொடர்பில்லை என்பதை உறுதி செய்தன.

அடுத்ததாக மூதாட்டி ஒருவர் மது அருந்தும் வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலேயே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது நினைவில் உள்ளது. எனவே, இந்த வீடியோ தொடர்பாகவும் தேடினோம். வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், இந்த வீடியோவை 2018ம் ஆண்டில் சிலர் யூடியூபில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

2011-21ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு 2021 மே மாதம் தான் தி.மு.க ஆட்சி அமைந்தது. மகளிர் உரிமைத் தொகை என்பது 2023 செப்டம்பரில் தான் தொடங்கப்பட்டது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படம், வீடியோ எல்லாம் 2016, 2018ம் ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளோம். இதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை வாங்கிய பெண்கள் மதுக்கடைக்கு சென்று மது அருந்தினார்கள் என்று பரவும் வீடியோ மற்றும் புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மகளிர் உதவித் தொகை திட்டம் தொடங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து திமுக எம்.எல்.ஏ தன்னுடைய வீட்டின் முன்பு கோலமிட்டிருந்த படத்தை எடுத்து, வசதியான நபருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மகளிர் உரிமைத் தொகை வாங்கி மது அருந்தும் பெண்கள் என்று பரவும் புகைப்படம் - வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False