நரேந்திர மோடி ஆட்சியில் விரைவாக அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அமைக்கப்படும் ரயில் பாதை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரயில் பாதை அமைக்கப்படும் வீடியோவுடன் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 18ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "*மோடியின் புதிய இந்தியாவில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணியின் வேகம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும் பகிர்ந்தும் வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்திய ரயில்வேயில் எப்போது சீனாவின் இயந்திரங்கள் இணைக்கப்பட்டன என்று தெரியவில்லை. வீடியோவில் உள்ள கனரக இயந்திரத்தில் பல இடங்களில் சீன மொழியில் எழுதப்பட்டிருந்தது. மேலும், சைனா கம்யூனிகேஷன் கன்ஸ்ட்ரக்‌ஷன் (China Communications Construction) என்று சீன மொழி வார்த்தைகளுக்கு கீழ் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. எனவே, நிச்சயம் இது இந்தியாவாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் இது பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பல புகைப்படங்களை மாற்றி மாற்றித் தேடியபோது சில தினங்களுக்கு முன்பு இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், மலேசியாவின் கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் பணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மலேசியாவில் கிழக்கு கடற்கரை ரயில் பாதையை சீன நிறுவனம் அமைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம்.

Archive

சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸில் இது தொடர்பான செய்தி 2023 டிசம்பர் 12ம் தேதி வெளியாகி இருந்தது. அதில், "சீனாவின் சைனா கம்யூனிகெஷன்ஸ் கன்ஸ்டிரக்‌ஷன் கம்பெனி மலேசியாவில் 665 கி.மீ நீளத்துக்கு மலேசியன் கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ரயில் தண்டவாளம் அமைக்கும் ரயிலின் முகப்பு பகுதியில் சீன மொழியிலும், ஆங்கிலத்தில் MRL என்றும் எழுதப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. குளோபல் டைம்ஸ் வெளியிட்டிருந்த மற்றொரு செய்தியில் அந்த தண்டவாளம் அமைக்கும் ரயிலின் முகப்பு பக்கத்தைத் தெளிவாகக் காட்டியிருந்தனர். அதிலும் ஒரு பக்கத்தில் சீன எழுத்துக்களும் மற்றொரு பக்கத்தில் எம்ஆர்எல் என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த ரயில் பாதை அமைக்கும் பணி மலேசியாவில் நடந்து வருகிறது என்பதும், இதற்கும் இந்திய ரயில்வேக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.

உண்மைப் பதிவைக் காண: globaltimes.cn I Archive 1 I globaltimes.cn I Archive 2

இந்தியாவிலும் ரயில் பாதை அமைக்கும் பணியில் அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம் வர வர அதை இந்திய ரயில்வேயும் தன்வசப்படுத்தி பயன்படுத்தித்தான் வருகிறது. இதையெல்லாம் ஒரு குறிப்பிட்ட நபர் சொந்தம் கொண்டாட முடிமா என்று தெரியவில்லை. நாம் அந்த ஆய்வுக்குள் செல்லவில்லை. இந்திய ரயில்வே அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை என்று கூறவில்லை. இந்த வீடியோ இந்தியாவைச் சார்ந்தது இல்லை என்று மட்டுமே உறுதி செய்துள்ளோம்.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ மலேசியாவைச் சார்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மோடியின் புதிய இந்தியாவில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது என்று பரவும் பதிவு தவறானது என்று செய்யப்படுகிறது.

முடிவு:

மலேசியாவில் சீன நிறுவனம் அமைத்து வரும் ரயில் பாதையை இந்தியாவில் மோடியின் ஆட்சியில் மிக வேகமாக நடக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி என்று தவறாக பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடி ஆட்சியில் விரைவாக அமைக்கப்படும் ரயில் பாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False