
சேலம் மேம்பாலத்தில் மூவர்ண தேசியக் கொடி ஒளி விளக்கு அமைக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2
பாலம் மூவர்ண ஒளி வெள்ளத்தில் இருப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “5வது சுதந்திர தினத்தையொட்டி பாலத்தில் ஒளிரவிடப்பட்ட மூவர்ணம்…!! #india #Independenceday #salem #bridgelight #nhroad #UpdateNews360” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Update News 360 என்ற ஊடகம் 2022 ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்டிருந்தது.
இதே வீடியோவை சிலர் சேலம் பாலத்தில் மூவர்ணம் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
உண்மை அறிவோம்:
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. நாட்டின் பல பகுதிகளில் தேசியக் கொடியின் மூவர்ணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மெட்ரோ பாலம் ஒன்று அலங்கரிக்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை சிலர் பகிர்ந்திருந்தனர்.
தற்போது, தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள மேம்பாலத்தில் இப்படி மூவர்ணம் காட்சிப்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டு சிலர் பகிர்கின்றனர். இந்த இடம் சேலமா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: instagram.com
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் மூவர்ண ஒளி விளக்கு என்று குறிப்பிட்டு பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், இது எங்கே என்று அவர்கள் குறிப்பிடவில்லை. இவற்றுக்கு இடையே இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று கிடைத்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்த போது, இந்த இடம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மெட்ரோ பாதை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே, மெட்ரோ, மூவர்ணம், சுதந்திர தினம் என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது, ஜெய்ப்பூர் மெட்ரோ மேம்பால பாதையில் மூவர்ண விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டுள்ளதாகப் பல வீடியோக்கள் கிடைத்தன. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன.
சேலம் பாலத்தில் இப்படி ஏதும் தேசியக் கொடியின் மூவர்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதா என சேலத்தில் உள்ள செய்தியாளர் நண்பரிடம் விசாரித்தோம். இந்த வீடியோவை பார்த்த அவர், இது சேலம் இல்லை என்று உறுதி செய்தார்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இந்த வீடியோ சேலத்தில் எடுக்கப்பட்டது என்று நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால், ஆஷ் டேக்கில் சேலம் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம், இந்த பாலம் சேலத்தில் உள்ளது என்று தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. இதை நம்பி வேறு சிலரும் சேலத்தில் மூவர்ணக் கொடி விளக்கு அலங்காரம் என்று பகிரத் தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதும், உண்மையை மறைப்பது போல இருப்பதும் உறுதியாகிறது.
முடிவு:
சேலம் பாலத்தில் மூவர்ண ஒளி விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது என்று பகிரப்படும் வீடியோ ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சேலம் மேம்பாலத்தில் மூவர்ண ஒளி அலங்காரம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
