
‘’ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்,’’ என்று மன்னை ஜீயர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். மன்னை ஜீயர் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டிருந்தது. அதில், “சாகும் வரை உண்ணாவிரதம் ! ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் – மன்னை ஜீயர்” என்று இருந்தது.
இதை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் யாரும் பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். அப்போது பலரும் இதை பகிர்ந்து வருவதை காண முடிந்தது. “இறுதிச் சடங்கு செலவு முழுக்க என்னுடையது…” என்று குறிப்பிட்டு இந்த பதிவை ட்விட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக்கில் Peravai Savanna என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 21ம் தேதி இந்த பதிவை பகிர்ந்துள்ளார். நிலைத் தகவலில், “எதிர்பார்புடன் … அந்த பொண்ணான நாளை திராவிட திருநாடே ஆவலுடன் எதிர்பார்க்கின்து” என’று குறிப்பிட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:
முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க எம்.பி-யுமான ஆ.ராசா கூறிய ஒரு கருத்து இந்துக்கள் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறி இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. புனித நூல்களுள் ஒன்று என்று கூறப்படும் நூலில் உள்ளதைத்தான் கூறினேன் என்று ஆ.ராசா பதில் அளித்துள்ளார். இந்த பிரச்னை தொடர்ந்துகொண்டே செல்கிறது.
இந்த சூழலில், ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று மன்னை ஜீயர் கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படவே இது பற்றி ஆய்வு செய்தோம். ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அவர் மன்னிப்பு கேட்கமாட்டார் என்ற நிலையில் யாரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று கூற முடியாது. மேலும், ஊடகத்தின் பெயர் எதுவும் குறிப்பிடாமல் மொட்டையாக இந்த படத்தைப் பகிர்ந்துள்ளனர். எனவே, இது போலியாக இருக்கலாம் என்று தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: hindutamil.in I Archive
இதை உறுதி செய்ய மன்னை ஜீயரின் சமீபத்திய கருத்துக்களைத் தேடினோம். அப்போது, “தனது பேச்சுக்காக ஆ.ராசா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மன்னார்குடி ஸ்ரீ ராமானுஜ ஜீயர் பேட்டி அளித்திருப்பதாக முன்னணி ஊடகங்களில் வெளியான செய்திகள் கிடைத்தன. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படத்தைப் பயன்படுத்தியிருந்தனர். அந்த செய்தியில் எந்த இடத்திலும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று ஜீயர் அறிவித்தார் எனக் குறிப்பிடவில்லை.
அவருடைய பேட்டி வீடியோ கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். பாலிமர் தொலைக்காட்சியில் மன்னை ஜீயரின் முழு பேட்டியும் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவை முழுவதுமாக பார்த்தோம். எந்த இடத்திலும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று அவர் கூறவில்லை. பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
உண்மையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று ஜீயர் அறிவித்திருந்தால் அது தொடர்பாக செய்தி வெளியாகி இருக்கும். எந்த ஒரு ஊடகத்திலும் அப்படி ஒரு செய்தி இல்லை. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜீயர் கூறியதாக மட்டுமே செய்தி வெளியாகி இருந்தது. இதன் மூலம் மன்னார்குடி ஜீயர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று அறிவித்தார் என்று பரவும் பதிவு போலியானது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என மன்னார்குடி ஜீயர் கூறியதாக பரவும் போஸ்டர் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று மன்னை ஜீயர் அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
