உலகின் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி என்று யுனெஸ்கோ அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

யுனெஸ்கோ (UNESCO) வழங்கியது போன்று சான்றிதழ் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "2016ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி இந்த உலகில் உள்ள ஒட்டுமொத்த காலை உணவுகளிலும் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாக தென்னிந்தியாவின் இட்லி அறிவிக்கப்படுகிறது" என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சான்றிதழ் புகைப்படத்தை ஒரு ஊர் செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

யுனெஸ்கோ இந்தியாவின் தேசிய கீதத்தை உலகிலேயே மிக சிறந்தது என்று அறிவித்தது என்றும், இஸ்லாம் மிகவும் அமைதியான மதம் என்று அறிவித்தது என்றும், உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை அறிவித்தது என்றும் முன்பு வதந்தி பரவியது. ஆனால், யுனெஸ்கோ அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை, சான்றிதழை வழங்கவில்லை என்று முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம்.

தற்போது உலகின் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி என்று யுனெஸ்கோ அறிவித்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது போன்று சான்றிதழ்கள் வழங்கப்படுவது இல்லை என்று ஏற்கனவே யுனெஸ்கோ உறுதி செய்துள்ளதாலும், இந்த சான்றிதழ் படம் முன்பு இஸ்லாம் மதம் தொடர்பாக பரப்பப்பட்ட வதந்தியில் பயன்படுத்தப்பட்டது போல இருந்ததாலும் இந்த பதிவு பற்றி ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: unesco.org I Archive

யுனெஸ்கோ வெளியிட்டிருந்த அறிக்கையில் சர்வதேச அமைதி அறக்கட்டளையுடன் (International Peace Foundation) தொடர்பு வைத்ததில்லை என்று அறிவித்திருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட சான்றிதழில் சர்வதேச அமைதி அறக்கட்டளை பெயரும் உள்ளது. இதுவே, இந்த சான்றிதழ் உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்ய போதுமானதாக இருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தை சரி பார்த்தோம். அதில், இட்லி உலகின் ஆரோக்கியமான உணவு என்ற வாக்கியம் சேர்க்கப்பட்ட பகுதி தனியாகத் தெரிவதை காண முடிகிறது. பழைய படத்தை எடிட் செய்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. அடுத்ததாக, இஸ்லாம் உலகின் மிகவும் அன்பான மதம் என்று சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியில் பயன்படுத்தப்பட்ட படத்தைத் தேடி எடுத்தோம். அதிலும் கூட 2016ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அந்த சான்றிதழ் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இந்த போலியான சான்றிதழை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியானது.

உண்மையில் யுனெஸ்கோ இப்படி சிறந்த உணவு தொடர்பாக அறிவிப்பு எதையாவது வெளியிட்டுள்ளதா என்று கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கேரளாவின் பழங்கஞ்சியை உலகின் சிறந்த காலை உணவு என்று யுனெஸ்கோ அறிவித்தது என்று பரவிய வதந்தி பற்றி ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் வெளியிட்டிருந்த ஆய்வுக் கட்டுரை கிடைத்தது.

இப்படி அவரவர், அவரவர் இஷ்டத்துக்கு ஏற்ப இந்த சான்றிதழை வைத்து வதந்தி பரப்பி வருவது உறுதியாகிறது இதன் அடிப்படையில் உலகின் சிறந்த ஆரோக்கியமான காலை உணவு என இட்லியை யுனெஸ்கோ அறிவித்தது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உலகில் உள்ள காலை உணவுகளில் மிகவும் ஆரோக்கியமானது இட்லி என்று யுனெஸ்கோ அறிவித்ததாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:RAPID FACT CHECK: உலகின் மிக ஆரோக்கியமான காலை உணவு இட்லி என்று யுனெஸ்கோ அறிவித்ததா?

Fact Check By: Chendur Pandian

Result: False