FactCheck: இந்த படத்தில் இருப்பவர் பிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் இல்லை!

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் பிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட். அவரது பொக்கிஷ அறைக்குள்ளேயே சிக்கி உணவின்றி இறந்துபோனார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், வயதான முதியவர் ஒருவர், தங்கக் கட்டிகள் மீது அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

அதன் மேலே, ‘’ இந்தப் படத்தில் இருப்பவர்தான் #ரூட்ஷெல்ட். பிரிட்டனில் பெரும் செல்வந்தராக #வாழ்ந்தவர். 

*#பிரிட்டன்  அரசாங்கம்,இவரிடமிருந்து #கடனாகப் பெற்று,தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு, மகா #செல்வந்தராக வாழ்ந்தவர்.

*ஒருநாள் தனது #பொக்கிஷங்கள்  நிறைந்த, அறைக்குள் நுழைந்து, #கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென வீசிய #காற்றில், திறந்து வைத்த #கதவுகள், திறக்க முடியாதவாறு மூடிக் கொண்டன.

*அது #ரகசிய அறை ரூட்செல்ட்டின் நூலக அறையில் இருந்து,அதற்குள் செல்ல வேண்டும்.#நூலக அறைக் கதவை உள் பக்கம் பூட்டி இருந்தார். பொக்கிஷ அறையின் #சாவி கதவிலேயே இருக்க, எப்படியோ பூட்டிக் கொண்டது.

*பல #நாட்கள் பசி ,பட்டினியாக இருந்து #மரணிக்கும் முன் #சுவற்றில் சில வரிகளை எழுதினார் ….

*”நான் #உலகில் ,மிகவும் உயர்ந்த மனிதனாக,பணக்காரனாக வாழ்ந்தேன். ஆனால், என் #சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது #பசி, #தாகத்தைக் கூட போக்க முடியாத #ஏழையாக மரணிக்கிறேன்”. அவர் மரணித்துப் பல #வாரங்களுக்கு பின்னரே,அவரின் உறவினர்களுக்கு அவர் உள்ளே #மாட்டிக் கொண்டது தெரிய வந்தது.

*பணத்தைக் கொண்டு, எதையும் #சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு,#இச்சம்பவம் ஒரு #பாடமாக அமையும். * படித்ததில் #பிடித்தது…!! ,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவலில் கூறியுள்ளது போல, பிரிட்டனில் ரூட்ஷெல்ட் என்ற பெயரில் யாரேனும் செல்வந்தர் வாழ்ந்தாரா என நீண்ட நேரம் தேடினோம். அப்போது, இணையதளத்தில் Nathan Mayer Rothschild என்பவரின் பெயர் கிடைத்தது.  

ஆனால், இவர் 1836ம் ஆண்டில் உயிரிழந்துவிட்டதாக, தெரிகிறது. இவர், சர்வதேச அரசியலில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய Rothschild family பின்னணியில் இருந்து வந்தவர் ஆவார். இவர்கள் ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட யூத குடும்பத்தினர். ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கு, அரசாங்கத்தை நிர்வகிக்கும் அளவில் கடன் உதவி செய்தவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விசயமாகும்.

ஆனால், நாம் ஆய்வு செய்யும் Nathan Rothschild உடலில் சீழ் பிடித்து, Abscess என்ற பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். ஜெர்மனியில் இருந்து தனது குடும்பத்தினரை பிரிந்து, பிரிட்டனில் குடியேறிய இவர், பிரிட்டனின் பங்குச்சந்தை மற்றும் வங்கி வர்த்தக துறைகளில் பெரும் செல்வாக்குடன் விளங்கியுள்ளார். 1836ம் ஆண்டில் உயிரிழந்துள்ளார்.

குறிப்பாக, பிரிட்டன் – பிரான்ஸ் இடையே நிகழ்ந்த Waterloo போரில் ரூட்ஷெல்ட் குடும்பத்தினர் வழங்கிய நிதி உதவி பெரும் கவனம் ஈர்த்த ஒன்றாகும். 

RothschildArchive.org Link

எனினும், இவரது மறைவிற்கு காரணம், ‘’பொக்கிஷ அறையில் பணம் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், கதவு சாத்திக் கொண்டதால், மூச்சடைத்து இறந்தார்,’’ என்ற கருத்தும் தவறாகும்.

இவர், abscess என்ற பாதிப்பில் சிக்கி 1836ம் ஆண்டு உயிரிழந்தார் என்று, அவரது குடும்பத்திற்கான ஆவண இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Death of Nathan Mayer Rothschild – RothschildArchive.org Link

மேலும், அவர் உருவத்தில் எப்படி இருப்பார் என்றும், அவரது குடும்ப தகவல் அடங்கிய களஞ்சியத்தில் விவரம் தேடியபொழுது கீழ்க்கண்ட விவரம் கிடைத்தது. இதற்கும், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. 

இவரைப் பற்றி கூடுதல் தகவலுக்கு https://www.rothschildarchive.org/ என்ற இணையதள முகவரியை பாருங்கள்.

இதுதவிர, கேமிரா கண்டுபிடிக்கப்பட்டு, புகைப்படங்கள் எடுப்பது வெகுஜன நடைமுறைக்கு வந்தது 1850களின் பிறகுதான். அதிலும், colour photography நடைமுறைக்கு வந்தது 1890களுக்குப் பிறகுதான்.

scienceandmediamuseum Blog Link

அத்துடன், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தகவல் தேடினோம்.

அப்போது, இது ஒரு மாடலுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், இவருக்கும், ரூட்ஷெல்ட் பரம்பரையினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்தது. Man counting Gold bars என்ற கீவேர்ட் பயன்படுத்தி, கூகுளில் இவரை பற்றி நீங்கள் தகவல் தேடலாம்.

இந்த புகைப்படத்தை போஸ்டருக்காக பல இணையதளங்களும் விற்பனை செய்கின்றன. 

Agefotostock LinkWalmart.com LinkNewegg.com Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) பிரிட்டன் செல்வந்தர் நாதன் ரூட்ஷெல்ட், நோய் பாதிப்பினால் உயிரிழந்திருக்கிறார்; பொக்கிஷ அறையில் சிக்கி மூச்சடைத்து இறந்தார் என்று கூறுவது வெறும் வதந்தியே.

2) நாதன் ரூட்ஷெல்ட் புகைப்படம் பற்றி அவரது குடும்பத்தினர் சார்பாக, ஓவிய முறையில் தீட்டப்பட்டு, தகவல் களஞ்சியமாக வெளியிடப்பட்டுள்ளது.

3) நாம் ஆய்வு செய்யும் புகைப்படம் கலரில் உள்ளது. கலர் புகைப்படம் எடுப்பது 1890களில்தான் நடைமுறைக்கு வந்தது. ஆனால், ரூட்ஷெல்ட் 1836ம் ஆண்டிலேயே உயிரிழந்துவிட்டார்.

எனவே, ரூட்ஷெல்ட் புகைப்படம் மற்றும் மரணத்திற்கான காரணம் பற்றி தவறான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்த படத்தில் இருப்பவர் பிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் இல்லை!

Fact Check By: Pankaj Iyer 

Result: False