
தமிழ் பாடலுக்கு ரோபோக்கள் நடனமாடின என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
நடிகர் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் ‘ராஜா கைய வச்சா’ பாடலுக்கு ரோபோக்கள் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ் பாடலுக்கு ரொபோக்கள் ஆடும் நடனம் அருமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Senthil Ganesh Rajalakshmi என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Guruvaraprasath என்பவர் 2021 ஜனவரி 7ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ் பாட்டுக்கு ரோபோக்கள் நடனமாடுவது போல வீடியோ உள்ளது. நடன அசைவுகளும் பாட்டுக்கு ஏற்றார்போல உள்ளன. எனவே, இது உண்மை என்று எண்ணி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று எதையும் குறிப்பிடவில்லை. உண்மையில் தமிழ் பாட்டுக்கு ரோபோக்கள் நடனமாடியிருந்தால் அதை தமிழ் ஊடகங்கள் பெரிய செய்தியாக வெளியிட்டிருக்கும். எனவே, ஆடியோ எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை கடந்த 2020 டிசம்பர் மாதம் போஸ்டன் டைனமிக்ஸ் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனம் ஒன்று வெளியிட்டிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: cnet.com I Archive 1 I interestingengineering.com I Archive 2 I twitter.com I Archive 3
புத்தாண்டையொட்டி ரோபோக்கள் நடனமாடும் வீடியோவை எடுத்து அவர்கள் யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் அவர் வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோவில், தமிழ் பாட்டுக்கு ரோபோக்கள் நடனமாடவில்லை. “டு யூ லவ் மீ” என்ற ஆங்கில பாடல் ஒன்றுக்கு ரோபோக்கள் நடனமாடுவது தெரிந்தது.
இந்த வீடியோவை எடுத்து ஒலியை (ஆடியோ) மட்டும் மாற்றி வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இந்த எடிட் செய்யப்பட்ட வீடியோவை ஷேர் செய்வதால் இங்கு யாருக்கும் பாதிப்பு இல்லை. இருப்பினும், ஆடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று உண்மையை சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால் நன்றாக ஆடியோ பொருந்தியுள்ளது என்று கூட பார்வையாளர்கள் பாராட்டியிருக்கலாம்.
நம்முடைய ஆய்வில், இந்த வீடியோவின் ஆடியோ மட்டும் எடிட் செய்யப்பட்டு, தமிழ் பாட்டுக்கு ரோபோக்கள் நடனமாடியது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
ஆங்கில பாடலுக்கு ரோபோக்கள் நடனமாடும் வீடியோவின் ஆடியோவை மட்டும் மாற்றி, தமிழ் பாட்டுக்கு ரோபோக்கள் நடனமாடின என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கமல்ஹாசன் பாடலுக்கு நடனமாடிய ரோபோ?- ஆடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: Missing Context
