பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவா?- உண்மை அறிவோம்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல், டீசல் விலை ரூ.100க்கு கீழ் உள்ளது என்றும், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். அதில், பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் மற்ற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல் விலை நிலவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.34க்கு விற்கப்படுகிறது என்றும், குஜராத்தில் 96.71க்கும், ஹரியானாவில் 95.78க்கும், உத்தரப்பிரதேசத்தில் 96.86க்கும், ஹிமாச்சல பிரதேசத்தில் ரூ.96.06க்கும், கோவாவில் ரூ.97.72க்கும் பெட்ரோல் விற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்குக் கீழே, “அதெப்டி பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் விலை குறைவாக இருக்குன்னு கேட்டேன் தூங்கிட்டான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை களக்காடு BJP நண்பர்கள் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஏப்ரல் 5ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற காலத்தில் 137 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதற்கு முன்பு பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரியை மோடி குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களும் தங்கள் பங்குக்கு வரியைக் குறைத்தன. இதனால், பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் சென்றது.

2022 மார்ச் 22ம் தேதியில் இருந்து பெட்ரோல் விலை உயரத் தொடங்கியது. தினசரி பெட்ரோல் விலை சராசரியாக 80 காசுகள் என்ற அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் ரூ.100ஐத் தாண்டி பெட்ரோல் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் போது பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது என்றும் இதர மாநிலங்களில் கடுமையான விலை ஏற்றம் உள்ளது என்பது போலவும் பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் தந்தி டிவி இந்த நியூஸ் கார்டை எப்போது வெளியிட்டது என்று பார்த்தோம். மார்ச் 24ம் தேதி இந்த செய்தியை யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தது. மார்ச் 24ம் தேதி செய்தியை ஏப்ரல் 5ம் தேதி பதிவேற்றி, தற்போதைய செய்தி போல் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருப்பது தெரிந்தது.

இவர்கள் குறிப்பிட்டிருப்பது போன்று குஜராத், ஹரியானா, உ.பி, ஹிமாச்சல பிரதேசம், கோவாவில் பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் விற்பனையாகிறதா என்று பார்த்தோம். குஜராத் அகமதாபாத்தில் பதிவு வெளியான ஏப்ரல் 5ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.28க்கு விற்பனையானது. ஏப்ரல் 6ம் தேதி ஒரு லிட்டர் ரூ.105.43க்கு விற்பனையாகிறது.

ஹரியானாவின் குர்கானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.76க்கும் விற்பனையாகி உள்ளது. ஏப்ரல் 6ம் தேதி அது 105.77 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் ஏப்ரல் 5ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.25க்கும், ஏப்ரல் 6ம் தேதி ரூ.105.25க்கும் விற்பனையாகியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஏப்ரல் 5ம் தேதி ரூ.104.91க்கும், ஏப்ரல் 6ம் தேதி 106.54க்கும் விற்பனையாகியுள்ளது. கோவாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஏப்ரல் 5ம் தேதி ரூ.105.07க்கும், ஏப்ரல் 6ம் தேதி ரூ.106.51க்கு விற்பனையாகி வருகிறது. 

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive

பா.ஜ.க ஆட்சி செய்யும் கர்நாடகாவின் பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.16க்கு விற்பனையாகிறது. இது சென்னை விலையை விட அதிகம். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 118.25க்கு விற்பனையாகிறது. பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரின் தலைநகர் பாட்னாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.116.29க்கு விற்பனையாகிறது. பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஏப்ரல் 6ம் தேதி ரூ.104.65க்கு விற்பனையாகிறது. 

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive

உண்மை இப்படி இருக்க, பழைய நியூஸ் கார்டுடை எடுத்து வந்து, தற்போது உள்ளது போன்று விஷமப் பிரசாரம் செய்திருப்பது தெளிவாகிறது. எல்லா மாநிலங்களிலும் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் விலை அதிகமாகத்தான் உள்ளது. ரூ.100-க்கு கீழ் எந்த மாநிலத்திலும் இல்லை. உண்மை நிலை இப்படி இருக்க, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் மீதான மாநில அரசு வரியைக் குறைத்து ரூ.100க்கு கீழ் கொடுப்பது போன்று தவறான தகவலை பகிர்ந்துள்ளனர்.

நாளை பெட்ரோல் விலை குறைக்கப்படலாம். பாஜக ஆளும் மாநிலங்கள் மிகப் பெரிய அளவில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியைக் குறைத்து, மீண்டும் பெட்ரோல் ரூ.100க்கு கீழ் கிடைக்கும் வகையில் செய்யலாம். ஆனால், இன்றைய நிலவரம் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய ஆய்வில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று எந்த மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுரை எழுதப்பட்ட 08.04.2022 நிலவரப்படி, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ரூ.100க்கு மேல்தான் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.118க்கு விற்பனையாகிறது. இதே போல் கர்நாடகத்திலும் விலை அதிகமாக உள்ளது. இதன் மூலம் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது என்றும்; தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும்தான் பெட்ரோல் விலை அதிகம் என்றும் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களுடன் மேற்கண்ட தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவா?- உண்மை அறிவோம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False