
இஸ்ரேலில் உள்ள ஒரு தேவாலயத்தில் இஸ்ரேல் கொடியை இறக்கிவிட்டு பாலஸ்தீன கொடியைக் கிறிஸ்தவர்கள் ஏற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கட்டிடத்தின் உச்சியில் பறந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டுக் கொடி கழற்றப்பட்டு பாலஸ்தீன கொடியை ஒருவர் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேலில் உள்ள தேவாலயத்தில் கிருஸ்தவர்கள் இஸ்ரேல் கொடியை இறக்கி பாலஸ்தீனின் கொடியை ஏற்றிய காட்சி. உலகில் பாசிச சங்கிகளை தவிர அனைத்து மக்களும் பாலஸ்தீனம் ஆதரிக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை New Chennai என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 அக்டோபர் 11ம் தேதி பதிவிட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
வீடியோவில் உள்ள கட்டிடம் கிறிஸ்தவ தேவாலயம் போல இல்லை. இங்கிலாந்தில் உள்ள செஃபீல்டு (Sheffield) கவுன்சில் கட்டிடத்தில் பறக்கவிடப்பட்ட இஸ்ரேல் கொடியை இறக்கி பாலஸ்தீன கொடியை ஏற்றிய மக்கள் என்று வேறு சிலரும் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: theguardian.com I Archive
இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நமக்கு எந்த விவரமும் கிடைக்கவில்லை. இங்கிலாந்து, இஸ்ரேல் கொடி இறக்கம், பாலஸ்தீன கொடி என்பது உள்ளிட்ட சில அடிப்படையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, இங்கிலாந்து ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன.
செஃபீல்டு கவுன்சில் டவுன் ஹாலில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செஃபீல்டு கவுன்சில் கட்டிடத்தில் பறந்த இஸ்ரேல் கொடியை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஏறிக் கழற்றி வீசினார். பின்னர், பாலஸ்தீனத்தின் கொடியை அவர் ஏற்றினார் என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள வீடியோவையும் அவர்கள் தங்கள் செய்தி மற்றும் யூடியூப் பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். இவை எல்லாம் இந்த சம்பவம் இஸ்ரேலில் நடக்கவில்லை, இங்கிலாந்தில் நடந்தது என்பதை உறுதி செய்தன. இதன் அடிப்படையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பறந்த இஸ்ரேல் கொடியை கிறிஸ்தவர்கள் கழற்றி வீசி, பாலஸ்தீன கொடியை ஏற்றினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இஸ்ரேல் கொடியை இறக்கிவிட்டு பாலஸ்தீன கொடியை ஏற்றினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாலஸ்தீன கொடி ஏற்றப்பட்டதா?
Written By: Chendur PandianResult: Misleading
