
டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டையொட்டி குடிசை பகுதிகள் பச்சை நிற துணியால் மறைக்கப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதி பச்சை நிற துணியால் மறைக்கப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மோடிஜீ தனது பத்து ஆண்டு சாதனையை மறைக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Muthu Krishnan என்பவர் 2023 செப்டம்பர் 9ம் தேதி பதிவிட்டிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
மற்றொரு பதிவில் “துணி கட்டி மறைக்கப்பட்ட டெல்லி குடிசை பகுதி” என்று இந்த படத்தின் மீது குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை மலையமான் தே.கி. என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 6ம் தேதி பதிவிட்டிருந்தார். இவர்களைப் போல பலரும் இந்த படத்தை சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வரும் போது குடிசை பகுதிகளை தடுப்பு வைத்து மறைப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. டெல்லியில் செப்டம்பர் 9, 10 தேதிகளில் ஜி 20 மாநாடு நடந்தது. அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமர் உள்பட பல நாட்டுத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். அவர்கள் கண்களில் படாமல் இருக்க ஏழை மக்கள் வாழும் பகுதிகள் துணி வைத்து மறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில் டெல்லியில் மறைக்கப்பட்ட குடிசை பகுதி என்று ஒரு புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் முன்பு ஜி 20 விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளதால் இது உண்மையாக இருக்கலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் 2023 செப்டம்பரில் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டின் போது இது வைக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2022ம் ஆண்டில் இந்த புகைப்படத்தை ஊடகங்கள் பயன்படுத்தியிருப்பதைக் காண முடிந்தது. இந்த ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தியது. இதற்காக நாடு முழுவதும் பல நகரங்களில் பல்வேறு துறை சார்ந்த சந்திப்புகள் நடந்தன. அந்த வகையில் மும்பையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டு நிர்வாகிகள் வரும் போது மும்பையின் குடிசைப் பகுதிகள் பச்சை நிற துணியால் மறைக்கப்பட்டன என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: nationalheraldindia.com I Archive 1 I gujaratimidday.com I Archive 2
டெல்லி என்பது தலைநகர ஆட்சிப் பகுதி. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருந்தாலும், மத்திய அரசின் அனுமதியின்றி அங்கு எதையும் செய்ய முடியாது. ஆனால், மகாராஷ்டிரா அப்படி அல்ல. அங்கு முழு மாநில அதிகாரத்துடன் அரசு உள்ளது. பாஜக கூட்டணி அரசு அங்கு ஆட்சியில் இருந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்வுக்கு நேரடியாக மத்திய அரசை குறை கூற முடியாது.
ஜி20 மாநாட்டையொட்டி ஏழை மக்கள் வாழும் பகுதிகள் பச்சை நிற துணி மறைப்பால் மறைக்கப்பட்டது உண்மைதான். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படமும் கூட ஜி20 மாநாட்டையொட்டி ஏற்படுத்தப்பட்ட தற்காலிக மறைப்பு தான். ஆனால், இந்த புகைப்படம் டெல்லியில் எடுக்கப்பட்டது இல்லை. 2022ம் ஆண்டு டிசம்பரில் மும்பையில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
2022ல் மும்பையில் நடந்த ஜி20 பணிக்குழு கூட்டத்தின் போது ஏழை மக்கள் வாழும் பகுதிகள் மறைக்கப்பட்ட படத்தை எடுத்து டெல்லி ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஜி 20 நாடுகள் மாநாடு: டெல்லியில் மறைக்கப்பட்ட குடிசை பகுதி என்று பரவும் படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: Missing Context
