போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நோக்கி டெல்லி போலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒரு தோட்டா குண்டு பாத்திரத்தை துளைத்து நிற்கும் காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாத்திரம் ஒன்றை துப்பாக்கித் தோட்டா ஒன்று துளைத்து நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மோடி அரசால் சுடப்படும் குண்டுகள்😡😡 தவறி பாத்திரத்தை துளைத்திருக்கும் காட்சி.

நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகளை சுட்டுக் கொல்லும் அரசை எதிர்த்து அணிதிரள்வோம்! சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுப்போம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானா எல்லையில் விவசாயிகள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்துள்ளதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் டெல்லி போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் அடையாளம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சில ஃபேஸ்புக் பக்கங்களிலும் சில வங்க மொழி போன்று தோற்றம் அளிக்கும் சில ஊடகங்களின் இணையதள பக்கங்களிலும் பகிரப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. ஃபேஸ்புக்கில் இந்த புகைப்படம் 2024 பிப்ரவரி 8ம் தேதியே பதிவிடப்பட்டிருந்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்த போது மியன்மார் எல்லையில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் 2024 விவசாயிகள் போராட்டம் என்பது பிப்ரவரி 13ம் தேதியில் இருந்து தொடங்கியது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பதன் மூலம் இது டெல்லி எல்லையில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்கிறது.

24onbd.com என்ற வங்க மொழி ஊடகத்தின் இணையதளத்தில் இந்த புகைப்படம் 2024 பிப்ரவரி 7ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அந்த இணையதள பக்கத்தை மொழிமாற்றம் செய்து படித்துப் பார்த்தோம். அதில், "மியான்மரில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்ப நிலை காரணமாக வங்கதேச எல்லையில் கலவரம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.

உண்மைப் பதிவைக் காண: 24onbd.com I Archive

மியான்மர் ராணுவம் இடைவிடாமல் எறிகணைகள், மோட்டார் எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வங்கதேச எல்லையோரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. மியன்மார் ராணுவம் வீசும் ஏவுகணைகள், துப்பாக்கி குண்டுகள் எல்லை தாண்டி வங்கதேச கிராமங்களில் விழுகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேச எல்லையில் மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு என்று இந்த புகைப்படம் வங்க ஊடகங்களில் வெளியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நோக்கி டெல்லி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது பாத்திரத்தைத் துளைத்த குண்டு என்று பரவும் புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

விவசாயிகளை நோக்கி டெல்லி போலீஸ் சுட்டதில் பாத்திரத்தை துளைத்த தோட்டா என்று வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட படத்தை தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘டெல்லி போலீஸ் சுட்டதில் பாத்திரத்தைத் துளைத்த தோட்டா’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False