இந்திய இஸ்லாமியர்களை மத்திய பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுள்ள மோகன் யாதவ் இஸ்லாமியர்களை மிரட்டும் வகையில் பேசினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்தியில் ஒருவர் பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் மத்திய பிரதேசத்தின் புதிய சிங்க முதலமைச்சர் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "அவர் சொல்றது என்னவென்றால் நீங்கள் முஸ்லிம்கள் உங்களுடைய வழிபாடுகளை உங்கள் முறைப்படி செய்வது எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் இது இந்துஸ்தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செய்யுங்கள். இங்கு வந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் (வாழ்க) ஆப்கானிஸ்தான் ஜிந்தாபாத்னு சப்போர்ட் பண்றது இந்த வேலையெல்லாம் இருக்கக்கூடாது. இல்லையெனில் அங்கேயே போயிருங்க. இங்க இருந்தா ஒழுக்கமா இந்தியனா இருங்க. இல்லைன்னா அட்ரஸ் இல்லாம போயிருவீங்க. அவ்வளவுதான் மாப்பிள்ளை.... " என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு ஃபேஸ்புக்கில் டிசம்பர் 14ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற உடனேயே இஸ்லாமியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் என்பதாக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்ற உடன் இப்படி கூறினாரா அல்லது முன்பு பேசிய வீடியோ வைரல் ஆகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இது பற்றி ஆய்வு செய்தோம்.

Archive

இந்த வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது 2021 ஆகஸ்ட் மாதம் வெளியான எக்ஸ் (ட்விட்டர்) தள வீடியோ பதிவு நமக்குக் கிடைத்தது. இந்தியில் இருந்த அந்த பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில் மத்திய பிரதேச முதல்வர் ரமேஷ்வர் ஷர்மா (Rameshwar Sharma) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ரமேஷ்வர் ஷர்மா என்று யாரும் உள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம். மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ-வாக ரமேஷ்வர் ஷர்மா இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பேட்டி ஊடகங்களில் வெளியாகி இருப்பது தெரிந்தது. இதன் மூலம் வீடியோவில் இருப்பது மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சர் மோகன் யாதவ் இல்லை என்பது உறுதியானது.

மோகன் யாதவ் மற்றும் எம்.எல்.ஏ ரமேஷ்வர் ஷர்மா ஆகிய இருவரின் ட்விட்டர் பக்கங்களையும் எடுத்தோம். முதலமைச்சர் மோகன் யாதவ் படத்துடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள எம்.எல்.ஏ-வின் படத்தையும் கூடுதலாக ஒப்பீடு செய்தும் வாசகர்களின் சந்தேகத்தைப் போக்க அளித்துள்ளோம். இவை எல்லாம் மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சர் பதவியேற்றதும் இஸ்லாமியர்களை மிரட்டும் வகையில் பேசினார் என்று பரவும் வீடியோ உண்மையில்லை என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

இஸ்லாமியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய பிரதேச முதல்வர் என்று பரவும் வீடியோவில் உள்ள நபர் ம.பி முதலமைச்சர் இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:முஸ்லிம்களை மிரட்டிய மத்திய பிரதேச முதல்வர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False