தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று தந்தி டிவி வெளியிட்ட செய்தி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், "தி.மு.க பிரமுகருக்கு 10 ஆண்டு சிறை. திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை. 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை. #திராவிடமாடல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக, சமீபத்தில் எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, பழைய செய்தியை எடுத்து புதியது போல பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்தோம்.


தந்தி டிவி யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவை தேடி எடுத்தோம். 2018ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இந்த செய்தியை தந்தி டிவி வெளியிட்டிருந்தது. 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் முதல் தீர்ப்பை அளித்துள்ளது என்று தி இந்து தமிழ் திசையில் செய்தி வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் பழைய செய்தியை புதியது போல இப்போது பகிர்ந்திருப்பது தெளிவானது.

Archive

நம்முடைய தேடுதலில் இந்த வழக்கிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாரை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்த செய்தியும் கிடைத்தது. சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ராஜ்குமார் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்று கூறி விடுவித்ததாக 2020ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வெளியான தி இந்து தமிழ் திசை வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.



உண்மைப் பதிவைக் காண: hindutamil.in I Archive

தந்தி டிவி கூட முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்ட செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த தீர்ப்பு வந்தபோது தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தான் தமிழ்நாட்டை அப்போது ஆட்சி செய்தது. இதன் மூலம் முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை செய்யப்பட்ட தகவலை மறைத்து, அவருக்கு சிறப்பு நீதிமன்றம் 2018ம் ஆண்டு அளித்த தண்டனை தொடர்பான செய்தியை 2024ல் புதிய செய்தி போல பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.


திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது உண்மைதான், ஆனால் அந்த வழக்கிலிருந்து அவரை சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்துவிட்டது. இதன்மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு பாதி உண்மை மற்றும் பாதி தவறான தகவல் கொண்டது என்பது உறுதியாகிறது.

முடிவு:

திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு சிறை தண்டனை என்று 2018ம் ஆண்டு செய்தியை புதிது போல பகிர்ந்திருப்பதையும் அந்த வழக்கில் அவரை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்த செய்தியை மறைத்திருப்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel

Claim Review :   தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று தந்தி டிவி வெளியிட்ட செய்தி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Claimed By :  Social Media Users
Fact Check :  MISLEADING