கோவை பிஎஸ்ஜி அருகே ஒரு தெருவோர பானிபூரி கடையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் பானிபூரி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive

ஸ்கிரிப்டட் வீடியோ போல் உள்ளது. பானிபூரிக்கான மசாலா கலந்த தண்ணீரை மிகவும் அருவருப்பான முறையில் தயாரிக்கப்படுவது போல் வீடியோ உள்ளது. அந்த மசாலா தண்ணீரிலேயே கை கழுவுவது உள்ளிட்ட எல்லா வற்றையும் விற்பனை செய்யும் நபர் செய்கிறார். அதை இரண்டு பெண்கள் வாங்க வருவது போலவும், அதை வேறு ஒருவர் வந்து தடுப்பது போலவும் வீடியோ உள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இந்த வீடியோ ஸ்கிரிப்டட் வீடியோ என்று எந்த தகவலும் இல்லை. நிலைத் தகவலில், "கோவை பிஎஸ்ஜி அருகில்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். சில வீடியோக்களில் கடைசியில் "இது விழிப்புணர்வு மற்றும் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டது. மக்கள் விழிப்புணர்வு அடைவதற்காக இந்த நாடகம் உருவாக்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் நிலைத் தகவலில், "கோவை பிஎஸ்ஜி அருகில்⚔️ பள்ளிக்கூட பசங்களுக்கு காலேஜ் பசங்களுக்கு குறிப்பாக பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு எல்லோருக்கும் இந்த வீடியோவை அனுப்பி விடுங்கள் ஏதோ நம்மளால் முடிந்தது நாட்டை திருத்த முடியாது" என்று குறிப்பிட்டு இது உண்மை வீடியோ என்பது போல பகிர்ந்திருந்தனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவை பார்க்கும் போதே இது திரைக்கதை அமைக்கப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடகம் போல உள்ளது. ஆனால், பலரும் இது ஸ்கிரிப்டட் வீடியோ என்று குறிப்பிடாமல் சமூக ஊடகங்களில் உண்மையில் கோவையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது போல பதிவிட்டு வரவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். கடந்த சில நாட்களாக இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் கடைசியில் Disclaimer என்று எச்சரிக்கை வாசகத்தை வெளியிட்டிருந்தனர். அதில், "This Reel Life Vido footage published only for the purpose of educating the public by making them understand how the real world situations will be. and picturized to educate public. Characters in this video are entertainment and education purpose" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது இந்த பொய்யான வீடியோ பதிவானது மக்களுக்கு உண்மையான உலகில் எப்படி எல்லாம் நடக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த வீடியோவில் உள்ள கதாபாத்திரங்கள் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே நடித்துள்ளனர்" என்று இருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ உண்மையானது இல்லை என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

உண்மையில் இந்த வீடியோவை யார் வெளியிட்டார்கள் என்று தொடர்ந்து தேடினோம். அப்போது இந்த வீடியோவை Sanjjanaa Galrani என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2024 ஜூன் 25ம் தேதி வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், இது ஸ்கிரிப்டட் டிராமா என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இது போன்று ஏராளமான வீடியோக்களை அவர் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பானிபூரி கடைக்காரரை வைத்து வேறு சில விழிப்புணர்வு வீடியோக்களை அவர் பதிவிட்டிருப்பதையும் காண முடிந்தது.

நம்முடைய ஆய்வில் கோவையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் பானிபூரி என்று பரவும் வீடியோ உண்மையானது இல்லை, விழிப்புணர்வு நோக்கிற்காக உருவாக்கப்பட்ட திரைக்கதை நாடக வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவரத்தை மறைத்து, இந்த சம்பவம் கோவையில் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பானிபூரியை சுகாதார மற்ற முறையில் தயாரிப்பது போன்ற ஸ்கிரிப்டட் வீடியோவை கோவையில் நடந்தது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கோவையில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் பானிபூரி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False