
‘’பாஜக- அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஜே.பி. நட்டா அறிவிப்பார்,’’ என்று தமிழ்நாடு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
டிசம்பர் 27, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், சன் நியூஸ் ஊடகம் வெளியிட்ட வீடியோ ஒன்றை இணைத்து, அதன் மேலே, ‘’ முதல்வர் வேட்பாளரை நட்டா தான் அறிவிக்க முடியும் – மாஃபா பாண்டியராஜன்,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 2021ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஒவ்வொரு கட்சியும் தங்களது முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு வருவதோடு, தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக உடன் இணைந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ், எதிர்வரும் தேர்தலை சந்திக்க தீர்மானித்துள்ளது. இதனால், இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் நிலவுகிறது.
அத்துடன், பாஜக, அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தமிழ்நாட்டில் யார் நியமிக்கப்படுவார், அவர் எப்படி தேர்தல் வியூகம் வகுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், சில நாள் முன்பு செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாடு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியிருந்தார். அவர், ‘’பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக அங்கம் வகிப்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம், அந்த கூட்டணியின் தலைவர் யார் என்பதை ஜே.பி.நட்டா இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பார்,’’ என்று கூறியிருந்தார்.
ஆனால், அவரது பேச்சை சன் நியூஸ் ஊடகம் தவறாக திரித்து செய்தி வெளியிட்டிருந்தது. அதாவது, முதல்வர் வேட்பாளரை நட்டா அறிவிப்பார் என்று பாண்டியராஜன் பேசியதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சன் நியூஸ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதனை உடனடியாக மறுத்ததோடு, சன் நியூஸ் தவறான செய்தி பரப்புவதாகக் கூறி, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில்தான் மேற்கண்ட வீடியோ பதிவு ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிலேயே, அமைச்சர் பாண்டியராஜன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரை நட்டா விரைவில் அறிவிப்பார் என்றுதான் கூறியுள்ளார்.
சன் நியூஸ் பெயரில் லோகோவுடன் இந்த வீடியோ பகிரப்படுவதால், அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகைய பதிவு வெளியானதா என்று தகவல் தேடினோம். அப்போது, தனது பதிவின் தலைப்பில் சன் நியூஸ் திருத்தம் செய்திருந்ததைக் கண்டோம்.
எனவே, சன் நியூஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் திருத்தம் செய்துவிட்ட நிலையில், மற்ற ஃபேஸ்புக் பயனாளர்கள், உண்மைத்தன்மை சரிபார்க்காமல் இன்னமும் தவறான தகவலையே பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவலில், உண்மையுடன், பொய்யும் சேர்த்து பகிர்ந்துள்ளனர் என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பாஜக- அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பற்றி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
