
திருமங்கலம் அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் உதயகுமார் மற்றும் ராமநாதபுரம் தி.மு.க வேட்பாளர் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்ட மது பாட்டில், தண்ணீர் பாட்டில், குளிர்பானம் பொட்டலம் படத்தை வைத்து இரு வேறுவித பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. முதலாவதாக எடுத்துக்கொண்ட பதிவில், “இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளராக போட்டியிடும் காதர்பாட்சா முத்துராமலிங்க தேவர் என்பவர் தொகுதி ஆண் வாக்காளர்களுக்காக மதுவிருந்து சப்ளை செய்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்,வாட்டர்பாட்டில் ஸ்னாக்ஸ் போன்றவையே கொடுப்பதற்காகத் தயாராக வழுதூர் உள்ள ஒரு கிட்டங்கியில் இருந்தது.!
அதை பறிமுதல் செய்தனர் தேர்தல் அதிகாரிகள் ! இராமநாதபுரம் மாவட்ட மக்கள் இன்னும் திமுகவுக்கும் மதுவுக்கு அடிமை……சிந்திப்பீர் செயல்படுவீர் வாக்களிப்பீர் நல்லாட்சி தரக்கூடிய நல்லாட்சிக்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Pugazhenthiran Pugazh என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 மார்ச் 18 அன்று பதிவிட்டுள்ளார்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இரண்டாவதாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், “திருமங்கலத்தில் போட்டியிடும் அமைச்சர் உதயகுமார் என்பவர் தொகுதி ஆண் வாக்காளர்களுக்காக மதுவிருந்து சப்ளை செய்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்,வாட்டர்பாட்டில் ஸ்னாக்ஸ் போன்றவையே கொடுப்பதற்காக தயாராக கப்பலூரில் உள்ள ஒரு கிட்டங்கியில் இருந்தது.! அதை பறிமுதல் செய்தனர் தேர்தல் அதிகாரிகள் !” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை மதுரை வழக்கறிஞர் எஸ்.கருணாநிதி என்பவர் 2021 மார்ச் 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இதே போன்ற பதிவைப் பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
தேர்தல் நேரத்தில் ஆளும், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் காட்சி ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்படுகின்றன. உடனடியாக அதுபற்றிய செய்திகளை அச்சு ஊடகங்களும் தங்கள் இணையதள பக்கங்களில் வெளியிடுகின்றன. அப்படி இருக்கும்போது தமிழகத்தின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான உதயகுமார் மற்றும் தி.மு.க வேட்பாளரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் வெளியானதாக நினைவில் இல்லை. இது தொடர்பாக கூகுளில் தேடியபோது எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இதனால், மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள முன்னணி ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்களைத் தொடர்புகொண்டு இப்படி ஏதும் சம்பவம் நடந்ததா என்று கேட்டோம். அப்படி எதுவும் நடந்ததாக செய்தி இல்லை என்றனர்.
இதைத் தொடர்ந்து இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதையும், இதே படத்தை வைத்து பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில் என்று வதந்தி பரவியது தொடர்பான செய்தியும் கிடைத்தது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ குஜராத்தி பிரிவில் கட்டுரையும் வெளியிட்டிருந்தனர்.
இவை தவிர, 2019ம் ஆண்டு வெளியான தாய்லாந்து மொழியில் இருந்த செய்திகள் சில கிடைத்தன. அதை கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்து பார்த்தபோது, அது தாய்லாந்து நாட்டின் உபான் ராட்சதானி மாகாணத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பலரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, உணவுப் பொருட்கள் போன்றவற்றை அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கினர்.
அசல் பதிவைக் காண: thaihitz.com I Archive 1 I theenews03.blogspot.com I Archive 2
ஆனால், யாரும் குடிக்கும் மக்களின் நிலையைப் புரிந்துகொள்ளவில்லை. மழை காரணமாக தொடர்ந்து மது அருந்தாமல் அவதிப்படுபவர்களுக்கு உதவ மது விநியோகிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் திருமங்கலம் மற்றும் ராமநாதபுரத்தில் கைப்பற்றப்பட்ட மது பாட்டில் என்று பகிரப்பட்ட படம் அந்த செய்தியில் இருந்தது. மேலும், மது பாட்டில் வழங்கியவரின் ஃபேஸ்புக் பதிவின் லிங்க்கும் அதில் கொடுத்திருந்தனர்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதன் மூலம் அமைச்சர் உதயகுமார் தொகுதியில் வழங்க வைக்கப்பட்டிருந்தது என்றும் ராமநாதபுரம் தி.மு.க வேட்பாளர் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் வாக்குகள் பெற தொகுதியில் விநியோகிக்க வைத்திருந்த மதுபாட்டில்கள் சிக்கின என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அமைச்சர் உதயகுமார் மற்றும் ராமநாதபுரம் தி.மு.க வேட்பாளரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள் என்று பரவும் படம் 2019ம் ஆண்டு தாய்லாந்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அமைச்சர் உதயகுமார் மற்றும் தி.மு.க வேட்பாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில் என்று பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
