
மது கோப்பையில் விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தில் புதினும் கிம் ஜாங் உன்னும் திகைத்து நின்றார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ரஷ்ய அதிபர் புதினும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் கையில் மது கோப்பையை வைத்துக்கொண்டு யார் முதலில் அருந்துவது என்று ஒருவரை ஒருவர் பார்த்தபடி திகைத்து நிற்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சூனாபானா வெசம் வெச்சுருபானோ……” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது அக்டோபர் 13, 2023 அன்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. பலரம் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் சந்தித்த போது யார் முதலில் கோப்பையில் உள்ள மதுவை அருந்துவது என்று திருதிருவென விழித்துக் கொண்டிருந்தது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால், இது முழுமையான வீடியோ போல இல்லை. எடிட் செய்யப்பட்டது போல இருந்தது. மேலும் இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பது உள்ளிட்ட எந்த ஒரு விவரத்தையும் பகிரவில்லை. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ 2019 ஏப்ரல் 25ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. ரஷ்ய அதிபர் தலைமையில் குழுவும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் குழுவும் சந்தித்துக்கொண்ட அமைதிக்கான சந்திப்பு நிகழ்வு அது என்பது தெரிந்தது.
வீடியோவில் அந்த சந்திப்பு தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் பேசுகிறார். மற்றவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர். புதின் பேசி முடித்ததும், மேசையில் தன் முன்பாக இருந்த (மது) கோப்பையை எடுக்கிறார். உடன் கிம் ஜாங் உன் உள்ளிட்ட மற்றவர்களும் எழுந்து (மது) கோப்பையை கையில் எடுக்கின்றனர்.
புதின் மற்றும் கிம் ஜாங் உன் (மது) கோப்பையை இடித்து சியர்ஸ் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு மற்றவர்களுக்கும் கோப்பையை காட்டி சியர்ஸ் செய்து அனைவரும் அருந்துகின்றனர். யார் முதலில் குடிப்பது என்று யோசிக்காமல், சியர்ஸ் செய்துவிட்டு அனைவரும் அருந்துவதைக் காண முடிகிறது.
எந்த பயமும் தயக்கமும் இல்லாமல் இருவரும் மரியாதை நிமித்தம் கோப்பையை சியர்ஸ் செய்யும் வீடியோவை எடிட் செய்து, இருவரும் மது அருந்தாமல் விழிப்பது போன்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் எடிட் செய்த வீடியோவை தவறாக பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.
முடிவு:
விஷம் கலந்திருக்கலாம் என்ற பயத்தில் யார் முதலில் அருந்துவது என கையில் கோப்பையுடன் தடுமாறிய புதின் – கிம் ஜாங் உன் என்று பரவும் உண்மையில்லை எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பயம் காரணமாக புதின் – கிம் ஜாங் உன் மது கோப்பையுடன் தடுமாறியதாக பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: Altered
