பள்ளியில் மாணவிகளைத் தொட்டு ஜெபம் செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் பிற்போக்கு விஷயங்களை பேசியதால் மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்ட சூழலில் இப்போது எடுக்கப்பட்ட வீடியோ போல இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மாணவிகளின் தலையைத் தொட்டு கிறிஸ்தவ ஜெபம் செய்யப்பட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "அறிவுக் குருடன் களுக்கு இதுவெல்லாம் தெரியாது போலும்... 😎😡 பெண்கள் பள்ளியில் ஒரு ஆண் அடுத்த வீட்டு பெண் பிள்ளைகளை எப்படி தொட்டு டுபாக்கூர் ஜபம் செய்து இப்படி மயக்க நிலை அடையச் செய்வான்.??? 🤬🤬 இந்த மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் எப்படி பள்ளிகளில் நடத்த அனுமதிப்பீர்கள்?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்ற நபர் மாற்றுத் திறனாளிகள் பற்றி பிற்போக்குத்தனமாகப் பேசியது சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மகாவிஷ்ணு என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பள்ளி ஒன்றில் கிறிஸ்தவ மத போதனை நடந்ததாகவும், மாணவிகளைத் தொட்டு ஜெபம் செய்ததாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் போது ஆபாச நிகழ்வு எதுவும் நடந்தது போல இல்லை. தலையில் கை வைத்து ஜெபம் செய்கின்றனர். பதிவிட்டவர்கள் பார்வையில் இது தவறாக இருக்கலாம். இந்த நிகழ்வு சரியா, தவறா, ஜெபம் செய்தவர் போலியானவரா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்த சம்பவம் இப்போது நடந்ததா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

வீடியோ தெளிவாக இல்லை. பார்க்க மிகவும் பழைய வீடியோவாக இருந்தது. மகாவிஷ்ணு சம்பவம் சென்னை அசோக் நகர் பள்ளியில் நடந்தது என்று தெளிவாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இந்த வீடியோவிலோ இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று எதையும் குறிப்பிடவில்லை. எனவே, வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது தெரியவந்தது.


அதாவது, 2018 செப்டம்பர் 27ம் தேதி "கேவலமான செயல் நம்ம தமிழ்நாடு" என்று குறிப்பிட்டுப் பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது இல்லை என்பது உறுதியானது. தொடர்ந்து தேடிய போது, 2013ம் ஆண்டில் இந்த வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் அப்படி ஏதேனும் கல்வி நிறுவனம் உள்ளதா என்று தேடிய போது, அந்த பெயரில் ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனம் செயல்படுவது தெரிந்தது.


மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டதும் 11 ஆண்டுக்கு முந்தைய வீடியோவை எடுத்து வந்து, இப்போது நடவடிக்கை எடுக்கக் கோரி பதிவிட்டிருப்பது இதன் மூலம் உறுதியானது. பள்ளியில் கிறிஸ்தவ ஜெபம் செய்யப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் இந்த வீடியோ மகாவிஷ்ணு கைதுக்குப் பிறகு அல்லது சமகாலத்தில் நிகழ்ந்தது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மாணவிகளைத் தொட்டு ஜெபம் செய்த கிறிஸ்தவ பள்ளி மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பதிவிடப்பட்ட வீடியோ புதிது இல்லை, 2013ல் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Claim Review :   பள்ளியில் மாணவிகளைத் தொட்டு ஜெபம் செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Claimed By :  Social Media Users
Fact Check :  MISSING CONTEXT