குஜராத் அரசின் ஏர் பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

குஜராத் அரசாங்கத்தின் உண்மையான ஏர் பஸ் என்று உடைந்த பேருந்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து மற்றும் குஜராத் என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய உடைந்த பேருந்து ஆகியவற்றின் புகைப்படத்தை ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்துக்கு மேல், “இத்தனை வருஷமா தமிழக அரசு இதுதான் ஏர் பஸ் என்று சொல்லி நம்மை ஏமாற்றி இருக்கிறது.. உண்மையான ஏர் பஸ் குஜராத்தில் மட்டும் ஓடுகிறது. அற்புதமாக காற்றும் வருகிறது!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த புகைப்படத்தை Balakrishnan Bala Krishnan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 1ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத் அரசு போக்குவரத்துக் கழகத்தின் பஸ் என்று குறிப்பிட்டுப் படத்தைப் பகிர்ந்துள்ளனர். ஆனால் பேருந்தின் மேல் குஜராத்தி மொழிக்கு பதில் இந்தியில் எழுதப்பட்டிருந்தது. எனவே, இந்த பஸ் குஜராத்தைச் சார்ந்ததா அல்லது வேறு மாநிலத்தைச் சார்ந்ததா என்று சந்தேகம் எழவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தை உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பதிவிட்டிருப்பது தெரிந்தது. அந்த பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்த போது “உடைந்த அல்லது கந்தலான பஸ், கந்தலான அரசு” என்பது போலான அர்த்தத்தில் பதிவிட்டிருப்பது தெரிந்தது. 

Archive

தொடர்ந்து இந்த புகைப்படத்தின் பின்னணி பற்றித் தேடிய போது உத்தரப்பிரதேச அரசு போக்குவரத்துக் கழக ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், “ரேபரேலி டெப்போ மண்டல உதவி மேலாளர் அளித்த தகவலின்படி, கான்பூரில் இருந்து லக்னோ சென்ற போது இந்த பேருந்தின் பின் பகுதியில் வேறு ஒரு வாகனம் மோதியதால் விபத்துக்குள்ளானது. பேருந்தின் பின்பகுதியும் உடைந்துவிட்டது. எனவே, உடைந்த பகுதிகளுடன் சேர்த்து பேருந்தானது பழுது நீக்கத்துக்காக லக்னோவில் உள்ள பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

Archive

பணிமனைக்குச் செல்லும் வழியில் புகைப்படம் எடுத்து பயணிகளுடன் பஸ் செல்வது போன்று தவறான தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம், இந்த பஸ் குஜாத்தைச் சேர்ந்தது இல்லை என்பது உறுதியாகிறது. உத்தரப்பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் பேருந்தின் புகைப்படத்தை குஜராத் அரசின் ஏர் பஸ் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குஜராத் அரசின் ஏர் பஸ் என்று பகிரப்படும் படம் உத்தரப்பிரதேசத்தில் விபத்துக்குள்ளான உத்தரப்பிரதேச அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குஜராத் அரசின் ஏர் பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False