FACT CHECK: நடிகர் விஜய் தன்னுடைய காருக்கு புதுச்சேரியில் பதிவு எண் பெற்றாரா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

நடிகர் விஜய் வரி சலுகைக்காக புதுச்சேரியில் ரிஜிஸ்டிரேஷன் செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு அருகில் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விசயின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் தோற்றம். அதில் கார் ரிஜிஸ்ட்ரேஷனைக் கவனிக்க. பாண்டிச்சேரி. 

அங்கிருந்து இங்கே நுழைய வரி கேட்டதில் என்ன தவறு? பல விலை உயர்ந்த கார்களை வாங்கிக் குவிக்கும் ஒருவரிடம் வரி கட்டச் சொல்வது எப்படி தவறாகும்?? ஏன் பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன்? காரணம் அங்கே வரி குறைச்சல் யூனியன் பகுதியாக இருப்பதால். இங்கே வண்டி ஓட்டுவதற்கு அங்கெதற்கு பதிவு பண்ணனும். இதுவே தவறான செயல். அதற்கே அவரை உள்ளே தள்ளனும்.

பணமில்லாதவன் ஏமாற்றுவதற்கும் பணம் வைத்திருப்பவன் ஏமாற்றுவதற்கும் 1000% மடங்கு வித்தியாசம் இருக்கே. 2012ல் போட்ட வழக்கு இதுவரை இழுக்க என்ன காரணம்?? இதற்கே இவ்வளவு நாளானால்… இவனுக்கு விதித்த தண்டனை 100% சரியே. அபராதத்தொகையை 1 கோடியாக போட்டிருக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த பதிவை Lion ShreeJawahar Nadar என்பவர் 2021 ஜூலை 14ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டதும், அது குறித்து நீதிபதி கருத்து கூறியது தொடர்பாகவும் செய்தி வெளியானது. அந்த செய்திக்குள் நாம் செல்லவில்லை. விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை தமிழகத்தில் வாகனப் பதிவு செய்யாமல், புதுச்சேரியில் செய்தார் என்று ஒரு படத்தை வைத்து பரவும் பதிவில் இடம் பெற்ற தகவல் உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படம் சர்க்கார் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்டது என்று சில செய்திகள் கிடைத்தன. அது எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற ஆய்வு தேவையில்லாதது. இந்த வாகனத்தின் உரிமையாளர் நடிகர் விஜய்யா என்று பார்த்தோம்.

நமக்கு வசதியாக வாகனத்தின் பதிவு எண் தெளிவாக தெரிந்தது. vahan.nic.in தளத்திலும், vahaninfos.com என்ற தளத்திலும் PY01BZ0005 என்ற பதிவு எண்ணை பதிந்து தேடினோம். அப்போது அது புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதும். நகைக் கடை ஒன்றின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது. நகைக் கடையின் பெயரில் வாகனம் இருப்பதால் இது நடிகர் விஜய்யின் வாகனமா என்ற சந்தேகம் எழுந்தது.

எனவே, நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் புகைப்படம் கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது, பல இணையதளங்கள் விஜய்யின் கார் என்று சில படங்களை பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. அந்த வாகனத்தின் எண் TN07BV0014 என்று இருந்தது. இதன் அடிப்படையில் மேலே குறிப்பிட்ட இணையதளங்களில் தேடினோம். அப்போது இந்த வாகனம் ஜோசப் விஜய் என்ற பெயரில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: chennaimemes.in I Archive

இதன் மூலம் நடிகர் விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை தமிழ்நாட்டில் பதிவு செய்யாமல், வரி குறைவாக இருக்கும் என்று புதுச்சேரியில் பதிவு செய்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நடிகர் விஜய் வரி சலுகை காரணமாக புதுச்சேரியில் பதிவு எண் பெற்றார் என்று பகிரப்படும் கார் அவருக்கு சொந்தமானது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நடிகர் விஜய் தன்னுடைய காருக்கு புதுச்சேரியில் பதிவு எண் பெற்றாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False