
ரயில் பெட்டிக்கு அடியில் ரயில் சக்கரங்களுக்கு மேல் உள்ள கம்பியில் அமர்ந்து 250 கி.மீ தூரம் பயணித்தவர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ரயில் சக்கரங்களுக்கு மேல் இருந்து ஒருவர் இறங்கி வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டிக்கெட் எடுக்க பணமில்லாமல், ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ., பயணித்த நபர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்த வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி பாலிமர் டிவி நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தது. அதில், “மத்திய பிரதேசத்தில் ரயில் பெட்டிக்கு அடியில் அமர்ந்து 250 கி.மீ. பயணித்த இளைஞர். டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகளிடம் தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவலை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வட இந்தியாவில் ரயில் பெட்டியின் கீழ், சக்கர கம்பிகளுக்கு மேல் உள்ள கம்பியில் அமர்ந்து 250 கி.மீ பயணித்த இளைஞர் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சக்கரங்களின் கம்பியும் சுழலக் கூடியதுதான். அப்படி இருக்க அதில் எப்படி அமர்ந்து பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. மேலும், வட இந்தியாவில் சிலர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது சர்வ சாதாரண விஷயமாக இருக்கும் போது, இவர் இவ்வளவு ரிஸ்க் எடுத்து பயணித்திருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்தது. எனவே, இந்த தகவல் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
ரயில் பெட்டிகளுக்கு அடியில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் சக்கரங்கள் செயல்பாடு தொடர்பாக சில யூடியூப் வீடியோக்களை முன்பு பார்த்திருந்த நினைவு இருந்தது. அதில், பெட்டியின் அடியில் பயணிக்கும் வகையில் எந்த சிறிய தடுப்பும் இருக்கவில்லை. எனவே, அப்படி வெளியான வீடியோக்களை தேடி எடுத்தோம். அவற்றைப் பார்க்கும் போது ஒரு மனிதர் ஒளிந்துகொள்ளும் அளவுக்கு கூட இடம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அப்படி இருக்க, இவர் எப்படி பயணித்திருக்க முடியும் என்ற கேள்வி எழவே, ஆய்வைத் தொடர்ந்தோம்.
இது தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்திகளை பார்த்தோம். அப்போது பிடிஐ செய்தி நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரியிடம் பேட்டி எடுத்ததாக செய்தி ஒன்று கிடைத்தது. அதை பார்த்தோம். ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பரப் பிரிவு செயல் இயக்குநர் திலீப் குமார் என்பவரிடம் இது தொடர்பாக கேட்டுள்ளனர்.
உண்மைப் பதிவைக் காண: timesnownews I Archive
அதற்கு அவர், “ரயில் பெட்டிக்கு அடியில் ஒளிந்து ஒருவர் பயணித்தார் என்ற தகவல் முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. ரயில் நின்று கொண்டிருந்த போது தண்டவாள கம்பிக்கு இடையே அவர் ஒளிந்துகொண்டிருந்தார். சக்கர அமைப்பு பகுதியில் ஒருவர் ஒளிந்து பயணம் செய்வது என்பது துளியும் சாத்தியமில்லாத ஒன்று” என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சில செய்திகள் தெரிவித்தன.
இது தொடர்பாக மேற்கு ரயில்வே தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில், “ரயில் சக்கர கம்பிக்கு மேல் அமர்ந்து 250 கி.மீ பயணித்தவர் என்று பரவும் தகவல் தவறானது. சக்கர அமைப்பு ரயில் இயக்கத்தின் போது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். அதில் ஒருவர் அமர்ந்து பயணிப்பது சாத்தியமில்லை. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மத்திய பிரதேசத்தில் ரயில் பெட்டியின் அடியில் பயணித்த நபர் என்று பரவும் தகவல் தவறானது என்று இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ரயில் பெட்டிக்கு அடியில் அமர்ந்து பயணித்தவர் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
