டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்திய போது “மோடி” கோஷம் எழுப்பப்பட்டதா?

இந்தியா | India சர்வதேசம் | International

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டிரம்ப் உரையாற்றிய போது அவரது கட்சியினர் மோடி மோடி என்று கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பேசும் போது சிலர் கோஷம் எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க தேர்தல் வெற்றி விழா..முதல் உரையில் டிரம்ப் பேசும் போது “மோடி- மோடி” என்ற கோஷம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது அவர் பேசியதன் ஒரு பகுதியை மட்டும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். டிரம்ப் யாரைப் பற்றி பேசுகிறார் என்பது அதில் இல்லை. முதல் முறை கேட்கும் போது மோடி, மோடி என்று கோஷம் எழுப்பியது போல இருந்தது. சற்று உற்று கவனித்த போது, பாபி, பாபி என்று கோஷம் எழுப்பியது தெரிகிறது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

டிரம்பின் வெற்றி உரை என்பதால் அந்த வீடியோவை எளிதாகக் கண்டறிய முடிந்தது. யூடியூபில் “டிரம்பின் தேர்தல் வெற்றி உரை” என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். FOX 13 Seattle யூடியூப் சேனலில் டிரம்பின் முழு உரையும் வெளியிட்டிருந்தனர். அதைப் பார்த்தோம். 19வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சி வந்தது. ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் என்று ஒருவரின் பெயரை டிரம்ப் கூறியதும் கூட்டத்தினர் பாபி, பாபி என்று கோஷம் எழுப்புகின்றனர். 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கோல்டன் ஸ்டேட் டைம்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஊடகத்தில் வெளியான டிரம்ப் பேச்சையும் தேடி எடுத்தோம். அதில், 20வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி வருகிறது. பாபி, பாபி என்று கோஷம் எழுவதை கேட்க முடிந்தது. எனவே, இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கூகுளில் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், டிரம்ப் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதியை மட்டும் வைத்து யூடியூபில் வெளியான செய்தி கிடைத்தது. ‘ராபர்ட் கென்னடி ஜூனியர் அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமானதாக மாற்றுவார் என்று டிரம்ப் கூறினார்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

டிரம்ப் வெற்றி உரை பற்றி என்டிடிவி-யில் செய்தி வெளியாகி இருந்தது. அதில், டிரம்ப் வெற்றி உரையில், பாபி கென்னடிக்கு கோஷம்… அது என்னவாக இருக்கலாம்” என்ற அர்த்தம் வரும் வகையில் தலைப்பிட்டிருந்தனர். அந்த செய்தியில் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரை அவரது ஆதரவாளர்கள் பாபி என்று அன்புடன் அழைக்கின்றனர். அவரைப் பற்றி டிரம்ப் குறிப்பிட்டதும் அவரது ஆதரவாளர்கள் பாபி பாபி என்று கோஷம் எழுப்பினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive

டிரம்ப் பேச்சை முழுமையாக பார்த்தோம். குறிப்பாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதியை ஒன்றுக்கு பல முறை பார்த்தோம். அவர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரைப் பற்றி பேசுகிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவர் எதுவும் கூறவில்லை. மேலும், ராபர்ட் கென்னடி ஜூனியரை குறிப்பிட்டு டிரம்ப் பேசினார் என்று பல செய்திகள் வெளியாகி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவிலே டிரம்ப் யாரைப் பற்றி பேசுகிறார் என்ற பகுதி வசதியாக அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் டிரம்ப் பேசும் போது மோடி என்று கோஷம் எழுந்தது போன்ற தெரியும் வகையில் வீடியோவை தங்களுக்கு ஏற்ப வெட்டி பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.ன இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டிரம்ப் வெற்றியுரையாற்றிய போது அவரது ஆதரவாளர்கள் “பாபி, பாபி” என்று கோஷம் எழுப்பியதை மோடி, மோடி என்று கூறியதாக சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்திய போது “மோடி” கோஷம் எழுப்பப்பட்டதா?

Written By: Chendur Pandian  

Result: False