விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் போல டர்பன் அணிந்து பங்கேற்ற இஸ்லாமியர் சிக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சீக்கியர் ஒருவரின் தலைப்பாகையை போலீசார் கழற்றி அவரை இழுத்துச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பிளாஸ்டிக் டர்பன் அணிந்து சிக்கியராக முஸ்லிம். விவசாய போராட்டம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Chandru Kundadam என்பவர் 2020 நவம்பர் 29ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாரதிய ஜனதா கட்சி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் டெல்லிக்குள் நுழையும் போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

லட்சக் கணக்கில் திரண்டு வந்துள்ள இவர்கள் உண்மையில் விவசாயிகளே இல்லை என்று பா.ஜ.க ஆதரவாளர்கள் தரப்பில் வதந்தி பரப்பப்படுகிறது. சீக்கியர் போர்வையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருவதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்து பங்கேற்ற இஸ்லாமியர் ஒருவரை போலீசார் கைது செய்தார் என்ற வகையில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது இந்த வீடியோ பல ஆண்டுகளாகவே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. சீக்கியர் போல் தலைப்பாகை அணிந்து வந்த முஸ்லிம் என்று இதே வீடியோவை கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஒருவர் பகிர்ந்திருந்தார்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive

விவசாயிகள் சட்டம் என்பது 2020 செப்டம்பரில் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாகவே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதன் மூலம் இதற்கும் விவசாயிகள் போராட்டத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியானது. எனவே, உண்மையில் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

அப்போது இந்த வீடியோ 2011ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. குறிப்பிட்ட தேதியில் கிராமப்புற கால்நடை மருந்தாளுநர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இந்த நபரை போலீசார் இழுத்துச் சென்றனர். அப்போது மொஹாலி எஸ்.பி பிரீத்தம் சிங் அந்த நபரின் டர்பனை அகற்றியுள்ளார்.

அசல் பதிவைக் காண: unitedsikhs.org I Archive

இதைத் தொடர்ந்து போலீசார் மீது சீக்கியர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் 2011 மார்ச் 29ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவையும் இணைப்பில் வழங்கியிருந்தனர்.

YouTube Link

தொடர்ந்து தேடிய போது டர்பனை அகற்றிய எஸ்.பி மற்றும் 8ம் எண் ஸ்டேஷன் அவுஸ் ஆஃபீசர் (எஸ்.எஸ்.ஓ) ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக செய்தி நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive

இதன் மூலம் டர்பன் அணிந்த நபர் இஸ்லாமியர் இல்லை என்பதும், இது 2020 நவம்பர் மாதம் நடந்த டெல்லி செல்வோம் விவசாயிகள் பேரணியின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி பதிவிட்டிருப்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்து இஸ்லாமியர் பங்கேற்றாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False