நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக டோல்கேட்: பீதி கிளப்பும் கலைஞர் செய்திகள்!

அரசியல் சமூக ஊடகம்

‘’நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக டோல்கேட் உள்ளது,’’ என்ற பெயரில் கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்ற சந்தேகத்தில் ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Kalaignar News Link Archived Link 2

Kalaignar Seithigal இந்த ஃபேஸ்புக் பதிவை கடந்த 11 செப்டம்பர் 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியில், தமிழ்நாட்டில்தான் ‘’டோல்கேட் என்ற பெயரில் தமிழகத்தில் வழிப்பறி கொள்ளை நடக்கிறது. தமிழகத்தில்தான் அதிக டோல்கேட் உள்ளது. கேரளாவில் 1782 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் உள்ளதில், டோல்கேட் 3 மட்டுமே உள்ளன. 15,437 கிமீ தொலைவு நெடுஞ்சாலைகள் கொண்ட மகாராஷ்டிராவில் 44 டோல்கேட் உள்ளன. ஆனால், 5,381 கிமீ தொலைவு நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் மட்டும் 52 டோல்கேட் உள்ளன,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன்பேரில், முதலில், கேரளாவில் எத்தனை கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் உள்ளன மற்றும் எத்தனை டோல்கேட் உள்ளது என விவரம் தேடினோம்.

அப்போது, 2017-18ம் ஆண்டு நிலவரப்படி மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம் கிடைத்தது. அதில், கிமீ அடிப்படையில், மகாராஷ்டிராவில்தான் அதிக தொலைவு நெடுஞ்சாலை உள்ளதாக, தெரியவந்தது. அதற்கடுத்தப்படியாக, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா அதிகளவு நெடுஞ்சாலைகள் கொண்டுள்ளன. தமிழகம், இதற்கடுத்து 7வது இடத்தில்தான் உள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதைத்தொடர்ந்து, எந்த மாநிலத்தில் டோல்கேட் எனப்படும் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை அதிகம் என ஆய்வு மேற்கொண்டோம். மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே இதற்கான விவரம் கொடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தற்போதைய சூழலில் இந்தியாவில் 531 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அனுமதிக்கு உள்பட்டு இயங்குகின்றன. 

இதில் அதிகபட்சமாக, ராஜஸ்தானில் 70 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதற்கடுத்தப்படியாக, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 60 சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் 46 சுங்கச்சாவடிகளும், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் 45 சுங்கச்சாவடிகளும் உள்ளன. கலைஞர் செய்திகள் குறிப்பிடுவது போல இல்லாமல், கேரளாவில் 6 சுங்கச்சாவடிகள் உள்ளன. 

இதுபற்றிய விவரத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர, 2017-18 நிலவரப்படி, சுங்க வரி வசூலில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும், உத்தரப் பிரதேசம் 2வது இடத்திலும் உள்ளன. 3வது இடத்தில் மகாராஷ்டிராவும், 4வது இடத்தில் தமிழகமும் உள்ளன. இதன் முழு விவரத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சுங்க வரி சமீபகாலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை பாதிக்கச் செய்வதாகவே உள்ளது. அதில் மாற்று கருத்தில்லை. ஆனால், தமிழகத்தில்தான் அதிக டோல்கேட் உள்ளதாகவும், அதிக தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் உள்ளதாகவும், தமிழகம்தான் அதிக சுங்க வரி செலுத்துவதாகவும் கூறுவது தவறு. இதேபோல, மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்கள் பற்றிய ஒப்பீடும் தவறாகும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் கலைஞர் செய்தியில் தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குழப்பமான செய்திகளை நமது வாசகர்கள் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக டோல்கேட்: பீதி கிளப்பும் கலைஞர் செய்திகள்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •