பிரான்சில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் தொழுகை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் வீடியோவை தற்போது நடந்தது போல பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: apnews.com I Archive

வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், ஒரு பக்கம் சாலை முழுக்க இஸ்லாமியர்கள் தொழுகை செய்கின்றனர். மறுபுறம் மிகபெரிய பேனரை சுமந்தபடி ஏராளமானோர் வருகின்றனர். தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.

நிலைத் தகவலில், "இஸ்லாம் என்னும் நன்றிகெட்ட கூட்டம். பிரான்ஸ் நாட்டில் நடந்த சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே.. நேற்று பிரான்ஸ் நாட்டின் ஒரு தெருவில் முஸ்லிம்கள் ஒன்றாக கூடி அல்லாஹூ அக்பர்.. லா இலாஹா இல்லல்லாஹ் போன்ற ஆபாச வார்த்தைகளால் பெரிய சத்தமிட்டு தொழுகை செய்தனர். அதனால் எரிச்சல் அடைந்த ப்ரான்ஸ் நாட்டு மக்கள் அவர்கள் நாட்டு தேசிய கீதத்தை முஸ்லீம்களை விட சத்தமாக பாடி முமீன்களை மூக்குடைத்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை காபீர் நிகில் என்பவர் அக்டோபர் 28ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் பற்றிய ஓவியத்தை காட்டியதற்காக ஆசிரியர் ஒருவர் தலை வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக பிரான்ஸ் உள்ளது. மதசார்பற்ற நாட்டில் கேலி சித்திரத்தை தடை செய்ய முடியாது என்று அந்நாட்டு அதிபர் உறுதிப்படக் கூறினார். இதனால் பிரான்ஸ் அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் சாலையில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரான்ஸ் தேசிய கீதம் பாடப்பட்டது போல பலரும் பதிவிட்டு வருகின்றனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் இந்த நிகழ்வு 2020 அக்டோபரில் நடந்தது என்ற வகையில் பதிவிடப்பட்டு இருந்தது. அதில் உள்ள கருத்துக்குள் நாம் செல்லவில்லை. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். தற்போது பிரான்சில் நடந்து வரும் சூழலில் எப்போது நடந்தது என்று குறிப்பிடாமல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அவை தற்போது நடந்தது போன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இதை பலரும் பகிர்ந்து வருவது தெரிந்தது. Tarek Fatah என்ற எழுத்தாளர் இந்த வீடியோவை அக்டோபர் 26ம் தேதி பதிவிட்டிருந்தார். அவருக்கு கமெண்ட் பகுதியில் ஒருவர் பதில் அளித்திருந்தார். அதில், இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ. இதே போன்ற வீடியோவை நானும் எடுத்தேன் என்று கூறியிருந்தார். எனவே, இந்த வீடியோவைப் பற்றித் தொடர்ந்து தேடினோம்.

Archive

தொடர்ந்து தேடியபோது ஏ.பி செய்தி நிறுவனம் 2017ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி வெளியிட்ட வீடியோ கிடைத்தது. அதில் பாரிஸ் புறநகர் பகுதியில் சாலையில் தொழுகை நடைபெறுவதை எதிர்த்து மேயர் தலைமையில் போராட்டம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

YouTube Link

அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவில் உள்ளது போன்ற பேனர் இருந்தது. இரண்டிலும் "Stop Aux Prieres De Rue Illegales!" என்று எழுதப்பட்டிருந்தது. மைக்கில் பேசி தொழுகை நடத்திய நபர் அணிந்திருந்த ஆடை இரண்டு வீடியோவிலும் ஒரே மாதிரியாக இருந்தது.

அசல் பதிவைக் காண: apnews.com I Archive

தொடர்ந்து தேடியபோது 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள வீடியோவை ஒருவர் யூடியூபில் வெளியிட்டிருப்பது நமக்கு கிடைத்தது. அதிலும் பாரிஸில் சாலையில் நடந்த தொழுகை தடுத்து நிறுத்தப்பட்டது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது.

YouTube Link

இதன் மூலம் இந்த வீடியோ தற்போது ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழலில் நடந்தது இல்லை என்று உறுதியாகிறது.

முடிவு:

பாரீஸில் 2017ம் தேதி நடந்த நிகழ்வை தற்போது நடந்தது போன்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சாலையில் தொழுகை நடத்த பிரான்ஸ் மக்கள் எதிர்ப்பா?- முழு விவரம் இதோ!

Fact Check By: Chendur Pandian

Result: False