
‘’சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் சத்துணவுத் திட்டத்தில் நடந்த அவலம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த ஃபேஸ்புக் பதிவு அக்டோபர் 25, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், அழுகிய முட்டைகள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் பலன்பெறும் குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ எத்தனையோ கோடி லஞ்சம் பெற்றும் கடைசியில் குழந்தைகளுக்கு வருவது வெறும் அழுகிய முட்டைகளே, சிங்கம்புணரி அரசு பள்ளி. இந்த செய்தி வெளியில் வராமல் பார்த்து கொள்வதே அரசு அதிகாரியின் கடமை ஆகிபோனதே… பல இடங்களில் இதே நிலை தான் என்று தற்போது தான் சொல்லுகின்றனர்.. ,’’ என எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போல, சமீபத்தில் எங்கேனும் செய்தி வெளியாகியுள்ளதா என தகவல் தேடினோம். அப்போது, இது கடந்த 2018ம் ஆண்டில் வெளியான செய்தி என்றும், தற்போது இப்படி நிகழவில்லை என்றும் விவரம் காண கிடைத்தது.
2018ம் ஆண்டில் சிங்கம்புணரியில் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. தற்போது இல்லை. அதேசமயம், சிங்கம்புணரி மட்டுமின்றி பல இடங்களிலும் இதுபோல சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள் விநியோகிக்கப்படுவதாக, புகார் கூறப்படுவது வழக்கமாக உள்ளது.
குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை தொடர்ந்து, காளையார் கோயிலிலும் இதுபோன்ற நிகழ்வு நடந்திருக்கிறது. தொடர்புடைய செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Dinakaran News Link I Webdunia News Link I HinduTamil News Link
இதேபோல, தமிழகம் முழுக்க ஆங்காங்கே பரவலான இடங்களில் இப்படி அழுகிய முட்டைகள் சத்துணவு திட்டத்தில் தவறுதலாக, விநியோகிக்கப்படுவது தெரியவருகிறது.
இவற்றுக்கு முத்தாய்ப்பாக, கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், முட்டை உற்பத்தி செய்யப்படும் நாமக்கல் மாவட்டத்திலேயே செயல்படும் அரசுப் பள்ளிகளில் இப்படி அழுகிய முட்டைகள், சத்துணவு திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்பட்டதாக, செய்தி வெளியானதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஏ. மாலா மற்றும் அங்கன்வாடி அதிகாரிகள் இணைந்து, சத்துணவு மையங்கள் பலவற்றில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பிறகு, முட்டையை சரிபார்த்தபின், அவற்றை வேகவைத்து மாணவர்களுக்கு, விநியோகிக்கும்படி அவர்கள் அறிவுறுத்தினர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் நிறுவனம்தான் ஒப்பந்த அடிப்படையில் முட்டை விநியோகிக்கிறது. அந்நிறுவனம் சுற்றுவட்டாரத்தில் உள்ள முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து, அரசுக்கு விநியோகம் செய்கிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படுவதில் முட்டையின் தரத்தில் தவறு நிகழ்ந்திருக்கலாம் என அப்போது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,
1) சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட முட்டைகள் அழுகியதாக இருந்தன என்று 2018ம் ஆண்டில் செய்தி வெளியானது.
2) சிங்கம்புணரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற அழுகிய முட்டை விநியோக விவகாரம் நிகழ்ந்ததாக, செய்திகள் பதிவாகியுள்ளன.
3) 2019ம் ஆண்டில் முட்டை உற்பத்தி செய்யும் நாமக்கல் மாவட்டத்திலேயே இத்தகைய விவகாரம் எழுந்ததால், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
4) தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்துதான் முட்டை விநியோகம் செய்யப்படுகிறது. அவர்கள் தரமற்ற முட்டைகளை தவறுதலாகக் கொள்முதல் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
5) எனினும், சிங்கம்புணரியில் 2018ம் ஆண்டு நிகழ்ந்த செய்தியை தற்போது நிகழ்ந்தது போல, நமது வாசகர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, மற்றவர்களை குழப்பியுள்ளார் என்று நமக்கு தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி குறிப்பிட்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம்!
Fact Check By: Pankaj IyerResult: Missing Context

சிறப்பான பணி! உள்நோக்கமுடைய தவறான செய்தி என உறுதிப்படுத்தப்பட்டால் சட்டத்தின் வழி அவர் தண்டிக்கப்படவேண்டும் ! தற்போது அரசே அப்படி இருக்கிறதே ? என்ன செய்ய !.!.!
பாராட்டுகள் !🙏👍🙏👍🙏👍