ஃபேஸ்புக்கில் பரவும் திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை படம் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலை குளம் போல காட்சி அளிப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

KANYAKUMARI 2.png
Facebook LinkArchived Link

சாலை முழுக்க குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலையில் குளம்போல காட்சி அளிக்கும் பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணிக்கிறார். வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் பயனில்லாத சாலையாக அது உள்ளது. நிலைத் தகவலில் “திருவனந்தபுரம், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை அவலநிலை. எம்.பி தேர்தல் பிரசாரத்தில் பிஸி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Erachakulam Kaliyappan என்பவர் 2019 அக்டோபர் 21ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மையானது என்று நம்பி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தேசிய நெடுஞ்சாலை முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சாலை அமைத்தல், பராமரித்தல் என அனைத்தையும் செய்வதும் செய்ய வேண்டியதும் மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்தான். நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக நிதின் கட்கரி உள்ளார். நெடுஞ்சாலைகளை அமைக்க, பராமரிக்க எம்.பி பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.வசந்தகுமார் உள்ளார்.

உண்மையில் இது கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் வசந்தகுமார் எம்.பி-ஆகி ஆறு மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அப்படி என்றால் இதற்கு முன்பு கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய இணை அமைச்சராகவும் இருந்த பொன் ராதாகிருஷ்ணன் தரமான சாலை அமைக்கவில்லை என்று சொல்ல வருகிறார்களா என்பதும் புரியவில்லை.

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் 2016ம் ஆண்டு தொடங்கியது. திருவனந்தபுரத்தில் இருந்து கேரள – தமிழக எல்லை வரை நான்கு வழிசாலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் அந்த பணிகள் நடைபெறவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாலையை சீரமைக்கக் கோரி அவ்வப்போது போராட்டங்களும் நடந்து வருகிறது.

DinamalarArchived Link 1
DinakaranArchived Link 2
News 7 TamilArchived Link 3

இந்த நிலையில், மேடும் பள்ளமுமாக சாலையில் ஒரு மினி குளம் இருப்பது போல் காட்சி அளிக்கும் இந்த படம் உண்மையில் கன்னியாகுமரியில் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் பல மாதங்களாக சமூக ஊடகங்களில் ஷேர் ஆகி வருவது தெரிந்தது. அவற்றை ஒவ்வொன்றாக பார்த்தோம்.

KANYAKUMARI 3.png
Search Link

தங்கள் பகுதியில் உள்ள சாலையின் மோசமான நிலை என்று ஒடிஷா, பீகார், குஜராத், சட்டீஸ்கர் என பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இந்த படத்தை பகிர்ந்திருப்பது தெரிந்தது. 

Archived Link

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாலையின் நிலை என்று ஸ்மிருதி இராணியின் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். ஸ்மிருதி இராணி 2019 ஆகஸ்ட் 2ம் தேதி உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் தொடர்பாக ட்வீட் செய்ததற்கு இந்த படத்தை அவர் பதிவேற்றம் செய்திருந்தார். உத்தரப்பிரதேசத்தையும் பீகாரையும் இணைக்கும் இந்த சாலை நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மோசமான நிலையில் உள்ளது என்றும், பள்ளி மாணவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Archived Link

பீகார் மாநிலத்தில் இந்த சாலை உள்ளதாகவும் மாநில முதல்வர் நிதிஷ் குமார், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை டேக் செய்து இந்த படத்தை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார். 2019 செப்டம்பர் 2ம் தேதி இந்த படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் என்எச்107 என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

Archived Link

2018ம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சாலை என்று இந்த படத்தைப் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து தேடியபோது 2015, 2013 என்று இந்த படம் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருவது உறுதியானது.

இந்த படத்தை நூற்றுக் கணக்கானோர் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளது தெரிந்து. ஆந்திரப்பிரதேசம், குஜராத், சட்டீஸ்கர், ஒடிஷா, பீகார், பாகிஸ்தான் என்று ஆளாளுக்கு இந்த படம் தங்கள் பகுதியைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். பல ஆண்டுகளாகவே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. இதனால், உண்மையில் இந்த புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் அடிப்படையில், கன்னியாகுமரி சாலையின் மோசமான நிலை என்று பகிரப்பட்டுள்ள படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஃபேஸ்புக்கில் பரவும் திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False