ஒடிஷாவில் தீபாவளி கொண்டாட்டத்தைத் தடுத்த இஸ்லாமியர்களை விரட்டிய இந்துக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா | India

ஒடிஷாவில் தீபாவளி கொண்டாடக் கூடாது என்று இஸ்லாமியர்கள் தடுத்ததாகவும், அவர்களை பட்டாசு வெடிகளை வைத்து இந்துக்கள் விரட்டி அடித்தார்கள் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஷாட் வகை ராக்கெட் பட்டாசை இளைஞர் ஒருவர் கையில் வைத்து எதிரில் இருப்பவர்களை தாக்குவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரிசாவில் நடந்த சம்பவம். தீபாவளி கொண்டாடி கொண்டிருந்த ஹிந்துக்கள் மீது அமைதிமார்கத்தினர் தாக்குதல் நடத்தினர். டெர்மினேட்டர் பட பாணியில் ஹிந்துக்கள் அவனுகளை திருப்பி தாக்கினர். பார்ப்பதற்கு மிகவும் திரில்லாக இருக்கு..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒடிஷாவில் தீபாவளி பண்டிகையை கொண்டாடக் கூடாது என்று இஸ்லாமியர்கள் தடுத்ததாகவும் அவர்களை டெர்மினேட்டர் என்ற ஹாலிவுட் படத்தில் இடம் பெற்ற காட்சி போன்று பட்டாவை வைத்து இந்துக்கள் தாக்கி விரட்டியதாகவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வீடியோ ஒடிஷாவில் எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் யார் மீதும் பட்டாசு செலுத்தி தாக்கியது போல இல்லை. கட்டிடங்கள் மீது தாக்கப்பட்டது போன்று காட்சி உள்ளது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

ஒடிஷாவில் இப்படி ஏதேனும் சம்பவம் நடந்ததா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. தீபாவளியன்று இரு சமூகத்தினருக்கு மோதல் ஏற்பட்டதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

Archive

அடுத்ததாக வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ இல்லாமல் தீபாவளி முழுமையடையாது என்று பலரும் அக்டோபர் 31, 2024 அன்று பதிவிட்டிருந்தனர். யாரும் இது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் என்று குறிப்பிடவில்லை. அதன் பிறகு நவம்பர் 1ம் தேதி சிலர் இது ஒடிஷாவில் இந்த – முஸ்லிம் மதத்தினரிடையே ஏற்பட்ட மோதல் என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தனர். இருப்பினும் இந்த வீடியோ பற்றிய முழு விவரமும் கிடைக்கவில்லை.

வீடியோ காட்சிகளை பல்வேறு புகைப்படங்களைக் கூகுள் லென்சில் மாற்றி மாற்றிப் பதிவேற்றித் தேடிப் பார்த்தோம். அப்போது, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்ததை காண முடிந்தது. ஆனால் அதில் அந்த வீடியோ பற்றி எந்த தகவலையும் அளிக்கவில்லை. இருப்பினும் 2022ம் ஆண்டிலேயே இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த வீடியோவுக்கும் 2024 தீபாவளிக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது. 

தொடர்ந்து தேடிய போது,  இந்த வீடியோவை 2018ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்ததைக் காண முடிந்தது. அதில், “VIMSAR விடுதி மாணவர்கள் ராக்கெட் வகை பட்டாசுகளை விடுதியில் வெடித்தனர்” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. VIMSAR என்றால் என்ன என்று பார்த்த போது ஒடிஷாவின் சம்பல்பூரில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர் விடுதி என்பது தெரியவந்தது. 

தொடர்ந்து தேடிய போது தீபாவளியையொட்டி VIMSAR மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஹாஸ்டலுக்குள் ராக்கெட் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர் என்பது போன்று செய்திகள் நமக்குக் கிடைத்தன. ஆனால், அவை எல்லாம் 2024 நவம்பரில் வெளியான செய்தியாக இருந்தது. 

நம்முடைய ஆய்வில் ஒடிஷாவில் தீபாவளி கொண்டாடக்கூடாது என்று இந்துக்களை இஸ்லாமியர்கள் தடுத்ததாகவோ, அதனால் வன்முறை ஏற்பட்டதாகவோ எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 2018ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடியதாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தீபாவளி கொண்டாட்டத்தைத் தடுத்த இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஒடிஷாவில் தீபாவளி கொண்டாட்டத்தை தடுத்த இஸ்லாமியர்களை பட்டாசுகள் வைத்து விரட்டி அடித்த இந்துக்கள் என்று பரவும் வீடியோ 2018ம் ஆண்டு கல்லூரி ஒன்றில் மாணவர்கள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:ஒடிஷாவில் தீபாவளி கொண்டாட்டத்தைத் தடுத்த இஸ்லாமியர்களை விரட்டிய இந்துக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False