‘’ஐபிஎல் தோல்வி காரணமாக சிஎஸ்கே ரசிகர் மீது தாக்குதல்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link


இதில், எம்எஸ் தோனி போல வேடமிட்ட கிரிக்கெட் ரசிகர் ஒருவரை சிலர் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை பகிர்ந்தவர் இது என்ன, எப்போது நிகழ்ந்தது என எதுவும் விவரம் கூறாமல், சோகமான எமோஜி வைத்து பதிவிட்டுள்ளார். இவரைப் போலவே பலரும் இந்த வீடியோவை கடந்த சில நாட்களாக ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும், கமெண்ட் பகிர்வோரும், இந்த சம்பவம் தற்போதைய, ஐபிஎல் தொடரின்போது நிகழ்ந்ததாக நினைத்து, உணர்ச்சி வசப்படுவதை கண்டோம்.

உண்மை அறிவோம்:
தற்போதைய 2020 ஐபிஎல் சீசனில், எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக சோபிக்கவில்லை. இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Zee News LinkNewIndianExpress Link


இந்நிலையில்தான் மேற்கண்ட வீடியோவையும் பலர் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ தற்போதைய ஐபிஎல் சீசனுடன் தொடர்புடையதோ, தோல்வி விரக்தியில் நிகழ்ந்ததோ இல்லை.

இந்த சம்பவம் நிகழ்ந்ததன் பின்னணி வேறு ஒன்றாகும். கடந்த 2018ம் ஆண்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழக அரசியல் கட்சிகள் கடுமையான போராட்டம் நடத்தினர். அதன் ஒருபகுதியாக, சென்னையில் நடைபெற்ற ஐபிஎஸ் போட்டியை நடத்தக்கூடாது என்று கூறி, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தியதோடு, கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்களை தாக்கவும் செய்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன்போதுதான், குறிப்பிட்ட தோனி வேடம் அணிந்த ரசிகரும் தாக்கப்பட்டார். அவர் இதுபற்றி ஊடகங்களுக்குப் பேட்டியும் அளித்திருந்தார். இதுபற்றிய வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, 2018ம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவத்தை தற்போது நிகழ்ந்தது போல நினைத்து, சரியான விவரம் இன்றி, உணர்ச்சி வசப்பட்ட நிலையில், கோபமாகவும், விரக்தியாகவும் பலர் தற்போது ஷேர் செய்கிறார்கள் என்று, சந்தேகமின்றி தெளிவாகிறது.

இவ்வாறு பழைய வீடியோவை தற்போது பகிர்வதால், சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் வீண் குழப்பத்திற்கு ஆளாக நேரிடுகிறது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சரியான விவரம் இல்லாமல், பழைய வீடியோ, புகைப்படம் போன்றவற்றை தற்போதைய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி குறிப்பிட்ட தகவல், குழப்பம் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளதென்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தோனி ரசிகர் தாக்கப்பட்டதற்கு ஐபிஎல் தோல்வி காரணமா?

Fact Check By: Pankaj Iyer

Result: Missing Context