நிலவில் இருந்து சந்திரயான் 3 எடுத்த செவ்வாய் கிரகம் படம் மூலம் நம்முடைய பஞ்சாங்கம் எல்லாம் உண்மை என்று உறுதியாகி உள்ளது, கிறிஸ்தவ நாடுகள் இனி விண்வெளி ஆய்வு செய்வது எல்லாம் தேவையற்றது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நிலவிலிருந்து செவ்வாய் கிரகம் தெரியும் புகைப்படம் மற்றும் பஞ்சாங்கம் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் ஆகியவற்றை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "திக காரனுங்க மூஞ்சில சாணியை அடிச்ச இந்து பஞ்சாங்கம்....

எந்த வித அறிவியல் உபகரணமும் இன்றி எப்படி இவ்வளவு துல்லியமாக இந்து மதம் கணித்துள்ளது.. இந்துக்களுக்கு கிரகங்களின் சஞ்சாரங்களை பார்க்கவும் கணிக்கவும் இன்றைய அறிவியல் தேவையில்லை.... ஆகவே கிறிஸ்தவ நாடுகளின் விஞ்ஞானிகள் ராக்கெட் விடுவதில் ஆராய்ச்சி செலுத்துவதை விட்டுவிட்டு இந்துக்கள் எப்படி துல்லியமாக கணித்தார்கள்.. அது எப்படி என்று இந்துக்களை ஆராயுங்கள்.. மானுடத்துக்கு இந்துமதம் மட்டும்தான் நல்லது.

சந்திரயான் இன்று அதிகாலை எடுத்த படம் இது, ஆச்சர்யம் என்னவென்றால், சந்திரனுக்கு அருகில் இருக்கும், சிகப்பாக இருக்கும் (பந்து போல) கிரஹம்தான், செவ்வாய், இதிலென்ன ஆச்சர்யம் என நினைக்கலாம் நேற்றைய கோச்சாரத்தில் (நிகழம் கிரஹச்சாரத்க்கட்டத்தில்) சந்திரனும், செவ்வாயும் ஒன்றாக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Sivappugaz Adv என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆகஸ்ட் 21, 2023 அன்றைய பஞ்சாங்கமும் சந்தியான் 3 நிலவிலிருந்து செவ்வாயை எடுத்த புகைப்படமும் ஒன்றாக இருப்பதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பஞ்சாங்கம் தொடர்பான தகவல் நமக்குப் புரியவில்லை. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று அறிய ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு படத்தை சந்திரயான் 3 வெளியிட்டதாக எந்த தகவலும் இல்லை. இஸ்ரோவின் X (ட்விட்டர்) பக்கத்தை பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் போல எதையும் இஸ்ரோ வெளியிடவில்லை என்பது தெளிவானது.

அப்படி இருக்க இவர்களுக்கு இந்த புகைப்படம் எப்படி வந்திருக்கும் என்ற சந்தேகமும் எழுந்தது. எனவே, இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தை நாசா 2020ம் ஆண்டில் வெளியிட்டிருப்பது தெரிந்தது. நாசா பதிவிட்டிருந்த படத்தினை வைத்து வதந்தி பரப்பியிருப்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: nasa.gov I Archive

நாசா வெளியிட்டிருந்த அந்த பதிவில் பூமியில் தென் அமெரிக்காவில் இருந்து சக்திவாய்ந்த தொலைநோக்கி வைத்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், செவ்வாய் கிரகத்தை நிலவு மறைக்கும் நிகழ்வு இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை Sergio Scauso என்பவர் எடுத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. Sergio Scauso இந்த புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பதிவிட்டிருந்தார்.

நாசா வெளியிட்ட படத்தை இந்தியாவின் சந்திரயான் 3 எடுத்தது என்று கூறியதை அறியாமையில் செய்கிறார்கள் என்று விட்டுவிடலாம், ஆனால் நாசா படத்தை வைத்து நாசா உள்ளிட்ட இதர விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இனி ஆராய்ச்சியே செய்ய வேண்டியதில்லை, பஞ்சாங்கத்தை ஆய்வு செய்தாலே போதும் என்று கதை விட்டிருப்பதை என்ன என்று சொல்வது?

நம்முடைய ஆய்வில் நிலவிலிருந்து சந்திரயான் 3 எடுத்த செவ்வாய் கிரகத்தின் புகைப்படம் என்று பரவும் புகைப்படம் நாசாவால் வெளியிடப்பட்டது என்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சந்தியான் 3 அனுப்பிய செவ்வாய் கிரக புகைப்படமும் பஞ்சாங்கமும் ஒத்துப் போவதால் இனி விண்வெளி ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பஞ்சாங்கம் உண்மை என்று சந்திரயான் 3 நிரூபித்ததா?

Written By: Chendur Pandian

Result: False