அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம்

அய்யா வழி பிரிவைச் சேர்ந்த பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாகவும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் கொடுத்த ரூ.25 லட்சம் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்

பணத்தை வாங்கிட்டுதான் மோடிக்கு எதிரா பேசினியா,

நீ இந்து மதத்தில் இருக்க தகுதியற்றவன்,

உணர்வு அற்றவனே,,,

Archived link

நியூஸ்7 வெளியிட்ட  நியூஸ்கார்டில், பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் சோதனை. ரூ.25 லட்சம் சிக்கியது. வசந்த குமார் கொடுத்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று உள்ளது. இந்த நியூஸ் கார்டுடன், ”பணத்தை வாங்கிக்கொண்டுதான் மோடிக்கு எதிராக பேசினாயா, நீ இந்து மதத்தில் இருக்கத் தகுதியற்றவன். உணர்வு அற்றவனே” என்று பதிவிட்டு ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.

முத்து கிருஷ்ணன் என்பவர் இந்த பதிவை ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்டுள்ளார். நியூஸ்7 நியூஸ் கார்டில் இந்த தகவல் வந்துள்ளதால், உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் அய்யா வழி என்கிற ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களின் சமயத் தலைவராக இருப்பவர் பாலபிரஜாபதி அடிகளார்.  அய்யா வழியை இந்து மதத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும், பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று அறிவித்தார்.  இது தொடர்பான வீடியோ பதிவு கீழே…

Archived link

இந்த நிலையில், பாலபிரஜாபதி அடிகளார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. யார் சோதனை நடத்தியது என்று அதில் குறிப்பிடவில்லை. ஆனால், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எச்.வசந்தகுமார் கொடுத்த பணம் பறிமுதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியாகி இருக்கிறதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

ஏப்ரல் 14ம் தேதி பிற்பகல் 12.47க்கு இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளதாக உள்ளது. எனவே, ஏப்ரல் 14ம் தேதி நியூஸ்7 தொலைக்காட்சியில் இந்த நியூஸ் கார்டு உள்ளதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு நியூஸ்கார்டும் இல்லை.

மேலும், நியூஸ்7 வெளியிடும் நியூஸ்கார்டு டிசைனும், மேற்கண்ட பதிவில் உள்ள டிசைனும் வெவ்வேறாக இருந்ததும் தெரிந்தது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள நியூஸ் கார்டில் ஏப்ரல் 14ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட அந்த காலக்கட்டத்தில் இந்த டிசைன் நியூஸ்கார்டை நியூஸ்7 தொலைக்காட்சி பயன்படுத்தவில்லை.

பிரேக்கிங் செய்திகளுக்காக நியூஸ்7 பயன்படுத்தும் புதிய டிசைன்:

தேர்தல் செய்திகளுக்காக நியூஸ்7  பயன்படுத்தும் மற்றொரு டிசைன்… அதில், தேர்தல் போர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த போட்டோ கார்டு…

கடந்த காலங்களில் நியூஸ் 7 பயன்படுத்திய டிசைனையும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள டிசைனையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில், பயன்படுத்தப்பட்ட தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது.

இதன் மூலம், நியூஸ்7 தொலைக்காட்சி 2016ம் ஆண்டில் வெளியிட்ட பிரேக்கிங் நியூஸ் கார்டை பயன்படுத்தி, பாலபிரஜாபதி தொடர்பாக போலியான நியூஸ்கார்டை தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்படுகிறது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், பணத்தை வாங்கிக்கொண்டுதான் மோடிக்கு எதிராக பேசினாயா என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், மோடிக்கு எதிராக பால பிரஜாபதி அடிகளார் பேட்டி கொடுத்ததில் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக இந்த போலி பதிவு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

பதிவை வெளியிட்ட முத்து கிருஷ்ணனின் பின்னணியை ஆய்வு செய்தோம். அவர் தன்னுடைய சுய விவர குறிப்பில், பாரதீய ஜனதா என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய பதிவுகளும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாகவும் காங்கிரஸ் எதிர்ப்பு நிலையிலும் இருந்தன. இதன் மூலம், பா.ஜ.க-வுக்கு எதிராக பேசியதால் பால பிரஜாபதி அடிகளார் பற்றி தவறான பதிவு வெளியிட்டுள்ளார் என்பது தெரிந்தது.

Archived link

நாம் மேற்கொண்ட ஆய்வில், பிரஜாபதி அடிகளார் வீட்டில் எந்த ஒரு சோதனையும் நடந்ததாக செய்தி கிடைக்கவில்லை. பிரஜாபதி அடிகளார், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அது நமக்குக் கிடைத்துள்ளது. அவரது காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு காரணமாக வெறுப்பு கொண்டு பாலபிரஜாபதி அடிகளார் பற்றி அவதூறு பரப்பும் நோக்கில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •